கள்ளக்காதலனை திருமணம் செய்ய... கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்த பெண் கவுன்சிலர்


கள்ளக்காதலனை திருமணம் செய்ய... கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்த பெண் கவுன்சிலர்
x
தினத்தந்தி 27 Feb 2022 10:06 AM GMT (Updated: 27 Feb 2022 10:06 AM GMT)

கள்ளக்காதலனை திருமணம் செய்வதற்காக கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 38). இவருடைய மனைவி சவுமியா (33). இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து இடது முன்னணி கவுன்சிலராக உள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருடன் சவுமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. வினோத் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி, தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் வினோத் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.

ஆனால் தங்கள் திருமணத்துக்கு சுனில் தடையாக இருப்பதாக கருதினர். அதைத்தொடர்ந்து அவரை கொல்ல முதலில் முடிவு செய்தனர். ஆனால் போலீசில் சிக்கி கொண்டால் விபரீதம் ஆகி விடும் என பயந்த இருவரும் கொலை செய்யும் திட்டத்தை கைவிட்டனர். ஆனால் சுனிலை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கவைக்கலாம் என இருவரும் தீர்மானித்தனர்.

அதைத்தொடர்ந்து வினோத் தன்னுடைய நண்பரான கொல்லம் வேங்கரையை சேர்ந்த ஷாநவாஸ் (39) என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அவர் கொச்சியில் உள்ள ஒரு போதைப் பொருள் கும்பலிடம் இருந்து ரூ.45 ஆயிரத்திற்கு போதைப்பொருளை வாங்கி வினோத்திடம் கொடுத்தார்.

வினோத் அதனை கொல்லம் முண்டக்கல் பகுதியை சேர்ந்த ஷெபின்ஷா (24) மூலம் சவுமியாவுக்கு கொடுத்து அனுப்பினார். பின்னர் சவுமியா அந்த போதைப்பொருளை தனது கணவரின் மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் மறைத்து வைத்து விட்டு வினோத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வினோத் தன்னுடைய நண்பர் மூலம், மோட்டார் சைக்கிளில் சுனில் போதைப் பொருள் கடத்துவதாக இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதை தொடந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி உத்தரவின் பேரில் வண்டன்மேடு போலீசார் சுனிலின் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அப்போது அதில் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுனில் கைது செய்யப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சுனில் நிரபராதி என்பதும், சவுமியா மற்றும் அவரது கள்ளக்காதலன் நடத்திய சதி திட்டம் தான் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுனில் விடுவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து குட்டு வெளிப்பட்டதால் சவுமியாவையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஷாநவாஸ், ஷெபின்ஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் துபாயில் உள்ள வினோத்தை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கள்ளக்காதலனை திருமணம் செய்வதற்காக கணவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெண் கவுன்சிலர் சிக்க வைத்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story