பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சுயேச்சை கவுன்சிலர்..!


பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சுயேச்சை கவுன்சிலர்..!
x
தினத்தந்தி 7 March 2022 9:59 AM GMT (Updated: 7 March 2022 9:59 AM GMT)

திண்டுக்கல்லில் உள்ள பாளையம் பேரூராட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளில் தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. தலா ஒரு வார்டிலும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும் மற்றும் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். 

இந்த நிலையில் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனிசாமி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அன்று மதியம் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில் கூட்டணியில் துணைத்தலைவர் பதவி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் 4-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் லதா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 13-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இதையடுத்து மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 15 வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பின்னர் முடிவுகள் எண்ணப்பட்டபோது சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் 10 வாக்குகளும், அ.தி.மு.க. கவுன்சிலர் 5 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் தி.மு.க. நிர்வாகியான சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் இன்று (07.03.2022) பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமியை சந்தித்து துணை தலைவர் பதவியை, தான் ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பின்னர் பேசிய கதிரவன் கடந்த 30 ஆண்டுகளாக நான் தி.மு.க.வில் நிர்வாகியாக இருந்து வருகிறேன். தற்போது நான் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போதும், தி.மு.க. தலைவரின் ஆணைக்கிணங்க தனது துணைத்தலைவர் பதவியை தற்போது ராஜினாமா செய்துவிட்டேன் என்று கூறினார்.

Next Story