தண்ணீர் பந்தலுக்கு அனுமதி கோரி பழனி முருகன் கோவில் அலுவலகம் முற்றுகை


தண்ணீர் பந்தலுக்கு அனுமதி கோரி பழனி முருகன் கோவில் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 17 March 2022 9:37 AM GMT (Updated: 17 March 2022 9:37 AM GMT)

தண்ணீர் பந்தலுக்கு அனுமதி கோரி பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு ஒரு சமுதாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி:

பழனி முருகன் கோவில் பகுதியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான மடம் உள்ளது. இந்த மடத்தின் சார்பில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது பக்தர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர.

தற்போது பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அந்த சமுதாயம் சார்பில் தண்ணீர், மோர் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த சமுதாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை பழனி கோவில் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தண்ணீர் பந்தல் அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பதாக கூறிஅலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வரும் கட்டளை முறைக்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பழனி கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story