திசையன்விளையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.1-க்கு விற்பனை - கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்...!


திசையன்விளையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.1-க்கு விற்பனை - கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்...!
x
தினத்தந்தி 23 April 2022 9:15 AM GMT (Updated: 23 April 2022 8:57 AM GMT)

திசையன்விளையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.1-க்கு விற்பனையாவதால் கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான நாடார் அச்சம்பாடு, இடையன்குடி, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி காரம் பாடு, தச்சன்விளை, இடைச்சி விளை, அழகிய வினா போன்ற பகுதிகளில் சொட்டு நீர்பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் மற்றும் அமெரிக்கா, லண்டன் துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

கோடைகாலங்களில் முருங்கைகாய் உற்பத்தி அதிகமாக இருக்கும். இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து  முருங்கைக்காய் வாங்கி செல்வார்கள்.

தற்போது கோடைகாலம் என்பதால் முருங்கைக்காய்  அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உடன்குடி, போலையர்புரம், ஒட்டன்சத்திரம் மற்றும் ஆந்திர மாநிலம் மேலும் வடமாநிலங்களிலும் தேவைக்கு அதிகமாக விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால் இங்கு சாகுபடி செய்துள்ள முருங்கைக்காய்களை வெளி ஊர்களுக்கு அனுப்ப முடியவில்லை. சமிபத்தில் பெய்த கோடை மழை காரணமாக முருங்கைக்காய்கள் மரத்திலேயே நிறம் மாறியுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு முருங்கைகாயை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. 

இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறியதாவது,

இந்த ஆண்டு முருங்கைக்காய் அதிக அளவில் காய்த்து இருந்தது.  நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.  ஆனால் விளைச்சல் ஆன பின்பு பெய்த கோடை மழையால் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த முருங்கைக்காய்கள் விலை இல்லாமல் போய்விட்டது.

மார்க்கெட்டில் கிலோ ரூ.1 கேட்கிறார்கள்.  ஒரு கிலோ சாகுபடி செய்ய உரம், மருந்து, கூலி என ரூ.5-க்கு மேல் செலவாகிறது.  பூச்சிகொல்லி மருந்து லிட்டர் ரூ. 3 ஆயிரம் வரை உள்ளது.

இத்தனை செலவுகளையும் செய்து முருங்கைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது வேதனையாக உள்ளது. 

விலை குறைந்த காலத்தில் முருங்கைக்காய்களை சேமித்து வைப்பதற்கு வசதியாக அரசு குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைத்து தந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

Next Story