கோவை: வடசித்தூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்...!


கோவை: வடசித்தூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்...!
x
தினத்தந்தி 4 May 2022 10:22 AM GMT (Updated: 4 May 2022 10:22 AM GMT)

வடசித்தூர் சோளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெகமம், 

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சோளியம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெற்று புதுப்பிக்கப்பட்டு, வர்ணங்கள் பூசி கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து கடந்த 29-ம் தேதி மங்கல இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கபட்டு கணபதி ஹோமம், மகா சாந்தி ஹோமம், வாஸ்து பூஜை, கோ பூஜை, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று மாலை வரை ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.

முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலை யாகசாலையில் ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நடத்தபட்டு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த குடங்களை மக்கள் வெள்ளத்தில் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி, கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story