கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்


கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
x
தினத்தந்தி 21 Nov 2021 2:17 AM GMT (Updated: 21 Nov 2021 2:17 AM GMT)

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது.

கொல்கத்தா, 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ராஞ்சியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இரவில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருப்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் அனுகூலமாக இருக்கிறது. அதாவது பனித்துளிகளால் பந்து ஈரமாகி விடுவதால் அதை சரியாக பிடித்து துல்லியமாக வீச முடியாமல் பவுலர்கள் தடுமாறுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை எளிதில் அடித்து நொறுக்கி விடுகிறார்கள். இன்றைய ஆட்டத்திலும் இதே நிலைமை தான். எனவே ‘டாஸ்’ ஜெயித்தாலே ஆட்டத்தை பாதி வென்றது மாதிரி தான்.

இந்த மைதானத்தில் இதுவரை ஏழு சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டங்களில் ஆடி அதில் 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹர் அல்லது அவேஷ்கான்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மன், கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், சோதி, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே, டிரென்ட் பவுல்ட் அல்லது பெர்குசன்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story