டிஎன்ஏ பரிசோதனையை ஆதாரமாக காட்டி பாலியல் குற்றவாளிகள் தப்ப முடியாது - சுப்ரீம் கோர்ட்டு


டிஎன்ஏ பரிசோதனையை ஆதாரமாக காட்டி பாலியல் குற்றவாளிகள் தப்ப முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 22 Nov 2021 10:03 AM GMT (Updated: 22 Nov 2021 10:27 AM GMT)

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் டி.என்.ஏ பரிசோதனையை மட்டுமே தங்களுக்கான ஆதாரமாக  காட்டி குற்றவாளிகள் தப்ப முடியாது என கூறியதோடு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு தண்டனையை உறுதி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மூக்கன் என்ற முருகன் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக விராலிமலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து குற்றவாளி சார்பில்  ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.  கடந்த ஜூலை மாதம்26 ஆம் தேதி  குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை வழங்கிய போது, பெண் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை மிகவும் கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது. பெண் குழந்தையின் உரிமை எப்போதும் ஆபத்தில் உள்ளது. இத்தகைய மிருகத்தனமான செயல்கள் குழந்தையின் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்குகின்றன. நீண்ட காலத்திற்கு அல்லது அவளது வாழ்நாள் முழுவதும் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கின்றன என சென்னை ஐகோர்ட்டு  தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதனை எதிர்த்து குற்றவாளி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை  நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகள் தனக்கு சாதகமாக வந்திருப்பதாகவும் எனவே அதனை கருத்தில் கொண்டு தன்னை வழக்கிலிருந்து விடுவித்து தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் “டிஎன்ஏ பரிசோதனையின்போது சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஏதேனும் தவறுகள் இருந்திருக்கலாம். எனவே டிஎன்ஏ பரிசோதனை மட்டும் குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக குற்றவாளிகள் பயன்படுத்த முடியாது. சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள் அது குறித்து மருத்துவ அறிக்கைகள் நேரடி சாட்சியங்கள் ஆகியவையெல்லாம் வலுவாக இருக்கிறது” எனக் கூறினார்

இதனை அடுத்து குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டின்  இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Next Story