பஞ்சாப் முதல்-மந்திரி பாகிஸ்தான் பயணம்...


பஞ்சாப் முதல்-மந்திரி பாகிஸ்தான் பயணம்...
x
தினத்தந்தி 18 Nov 2021 9:47 AM GMT (Updated: 18 Nov 2021 9:47 AM GMT)

கர்தார்பூர் குருத்வாராவில் தரிசனம் செய்வதற்காக பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி இன்று பாகிஸ்தான் சென்றுள்ளார்.

லாகூர்,

பஞ்சாபை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், தமது கடைசி காலத்தில் அப்பகுதியில்தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. அவரது நினைவாக ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்று தரிசிப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாகும். பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான இந்த சீக்கிய புனித தளத்திற்கு இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் செல்வது வழக்கம். இதற்காக பஞ்சாபில் இருந்து பாகிஸ்தானின் கத்தார்பூரை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கர்தார்பூர் குருத்வாராவுக்கு தரிசனத்திற்காக பாகிஸ்தானுக்கு செல்ல விசா தேவையில்லை.

இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் கர்தார்பூர் வழித்தடம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு கர்தார்பூர் வழித்தடம் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. வழித்தடம் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று விசா இன்றி இந்தியாவில் இருந்து பெண்கள் உள்பட 28 சீக்கியர்கள் கர்தார்பூர் குருத்வாரா சென்றனர்.   

இந்நிலையில், கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட இரண்டாவது நாளான இன்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் உள்பட 30 பேருடன் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா சென்றார். பஞ்சாப் எல்லையில் இருந்து கர்தார்பூர் வழித்தடம் வழியாக கார் மூலம் சரண்ஜித் சிங் சன்னி பாகிஸ்தான் சென்றார். அவர் குருத்வாராவில் தரிசனம் செய்தார்.

Next Story