கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நியூயார்க் நகராட்சி ஊழியர்கள் போராட்டம்


கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நியூயார்க் நகராட்சி ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2022 9:15 AM GMT (Updated: 13 Feb 2022 9:15 AM GMT)

நியூயார்க்கில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியூயார்க்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனாவிற்கு எதிரான போரில் தடுப்பூசி மிக முக்கிய பங்கு வகிப்பதாக உலக சுகாதார மையம் கூறி வருகிறது. சர்வதேச பயணங்கள் மேற்கொள்வதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியமானதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இந்த போராட்டங்கள் பெருமளவில் பொதுமக்களால் நடத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்திக் கொள்வது தங்கள் உரிமை என்றும் அதனை அரசு தங்கள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனரக வாகன ஓட்டுனர்கள் இணைந்து நடத்திய 'Freedom Convoy' எனப்படும் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டம்’ சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. கனடாவை தொடர்ந்து பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக சுதந்திர வாகன அணிவகுப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

அந்த வகையில் நியூயார்க் நகரில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மேயர் அலுவலகம் உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நிலையில் உள்ளனர். இதனால் நியூயார்க் நகராட்சி ஊழியர்கள் மற்றும் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்பூசி செலுத்திக் கொள்வது தங்கள் உரிமை என்றும், அரசு நகராட்சி நிர்வாகம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story