“உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப முடியாது” - மெக்சிகோ அதிபர் திட்டவட்டம்


“உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப முடியாது” - மெக்சிகோ அதிபர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 5 March 2022 9:34 AM GMT (Updated: 5 March 2022 9:34 AM GMT)

ரஷிய படைகளை எதிர்கொள்ள தங்களுக்கு ராணுவ படைகளை அனுப்பி வைக்குமாறு மெக்சிகோ அரசிடம் உக்ரைன் உதவி கோரியிருந்தது.

மெக்சிகோ சிட்டி,

உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, நேட்டோ நாடுகள் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இதுவரை எந்த நாடும் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பி உதவவில்லை. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளையும் செய்வதாக பல்வேறு நாடுகள் உறுதியளித்துள்ளனர்.

சர்வதேச அளவில் ரஷியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஐ.நா. சபை, நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ஆகியவை கூறி வந்தாலும், தங்கள் நாட்டுக்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்ய வேண்டும் என உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

அந்த வகையில், ரஷிய படைகளை எதிர்கொள்ள தங்களுக்கு ராணுவ படைகளை அனுப்பி வைக்குமாறு மெக்சிகோ நாட்டு அரசிடம் உக்ரைன் உதவி கோரியிருந்தது. இந்நிலையில் தங்கள் நாடு உக்ரைனுக்கு ஆதரவாக படைகளையோ அல்லது ஆயுதங்களையோ அனுப்பாது என்றும் தாங்கள் அமைதியை விரும்புவோர் என்றும் மெக்சிகோ அதிபர் அண்ட்ரெஸ் மேனுவல் தெரிவித்துள்ளார்.

Next Story