அமெரிக்கா-ரஷியா விண்வெளி உறவில் விரிசல்; ரஷிய வீரர்களுடன் அவசரமாக பூமிக்கு திரும்பும் அமெரிக்க வீரர்!


Image Courtesy : Internet
x
Image Courtesy : Internet
தினத்தந்தி 15 March 2022 10:08 AM GMT (Updated: 15 March 2022 10:08 AM GMT)

2030ம் ஆண்டு வரை விண்வெளி நிலையத்தில் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அமெரிக்காவின் நாசா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.ஆனால் ரஷியா இதற்கு மறுத்துவிட்டது.

வாஷிங்டன்,

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷிய விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவர் அவசரமாக பூமிக்கு திரும்புகிறார்.

55 வயதான மார்க் வேண்டே ஹெய் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தனர்.அவர்களுடன் ரஷியாவின் பியோட்டர் டுப்ரோவ் மற்றும் இன்னொரு ரஷிய வீரரும் உடன் சென்றனர்.

அதில் வேண்டே ஹெய் மற்றும் டுப்ரோவ் ஆகிய இருவர் மட்டும் 2 மடங்கு அதிக காலம் விண்வெளியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த வகையில், விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார் வேண்டே ஹெய். ஆனால், அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த சாதனை ரஷிய வீரர்களிடம் உள்ளது. அவர்கள் 438 நாட்கள் அதாவது சுமார் ஓராண்டுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்து பணிபுரிந்தனர்.

இந்நிலையில், அமெரிக்கா ரஷியா இடையே நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க விண்வெளி வீரர் வேண்டே ஹெய் இரண்டு ரஷிய வீரர்களுடன் பூமிக்கு திரும்புகிறார் என்று நாசா தெரிவித்துள்ளது. 

அவர்கள் அனைவரும் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில்  கசகஸ்தான் நாட்டில் மார்ச் 30ம் தேதி  தரையிறங்குகின்றனர். அங்கிருந்து அவரை உடனடியாக அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல வசதியாக, நாசாவின் பிரத்யேக விமானம் ஒன்று கசகஸ்தான் வந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பின் விளைவாக, சில விண்வெளி பயணங்கள் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படுவது ரத்து செய்யப்பட்டன. மேலும், பல விண்வெளி ஒப்பந்தங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவரிடமிருந்து வெளிப்படும்  தீவிரமான வார்த்தைப் போர் போன்ற காரணங்களால், திட்டமிட்ட தேதிக்கு முன்கூட்டியே, அமெரிக்க-ரஷிய விண்வெளி வீரர்கள் பூமி திரும்பி வருவதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன.

2030ம் ஆண்டு வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அமெரிக்காவின் நாசா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால் ரஷியா இதற்கு மறுத்துவிட்டது.

சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சியை பொறுத்தவரையில், அமெரிக்காவும் ரஷியாவும் பிரதான செயல்பாட்டாளர்களாக  செயல்பட்டு வருகின்றன. அதில் பிரதான செயல்பாட்டாளரான ரஷியா விலகுவதாக அறிவித்திருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நாசா மனித விண்வெளிப் பயணத்தின் தலைவர் கேத்தி லூடர்ஸ் கூறுகையில், “விண்வெளியில் அமைதியாக செயல்பட முடியாவிட்டால், சர்வதேச நடவடிக்கைகளுக்கு அது ஒரு சோகமான நாளாக இருக்கும். ஒருங்கிணைப்பின்றி தனியாக விண்வெளி திட்ட செயல்பாடுகளை மேற்கொள்வது சிரமமான காரியம்” என்றார்.

தற்போது, சீனாவை நோக்கி கவனத்தை செலுத்திவரும் ரஷியா, சீனாவுடனான அதன் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் என்று தெரிகிறது.

Next Story