நவ துளைகளின் வழியே ஜம்புகேஸ்வரர் தரிசனம்


நவ துளைகளின் வழியே ஜம்புகேஸ்வரர் தரிசனம்
x
தினத்தந்தி 7 April 2022 10:23 AM GMT (Updated: 7 April 2022 10:23 AM GMT)

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஜம்புகேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்ப்போம்.

சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், தேவாரப்பாடல்கள் இடம்பெற்ற
274 சிவாலயங்களில் 60-வது தலம் ஆகும்.

சிவன் கட்டளைப்படி, அம்பாள் பூமியில் மானிடப்பெண்ணாக அவதரித்தார். அப்போது காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டார். அந்த லிங்கத்தில் எழுந்தருளி, சிவபெருமான் அம்பாளுக்குகாட்சிகொடுத்தார். இதனால் இத்தலம் பஞ்ச பூததலங்களில் ‘நீர் தலம்’ ஆனது.

இத்தல இறைவனான ஜம்புகேஸ்வரர், இங்கே சுயம்புமூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.

தனக்கு ஏற்பட்ட பாவத்தைப்போக்க பிரம்மதேவன் இத்தல இறை வனை வழிபட்டுள்ளார். அதேபோல் விலங்குகளில் யானை , சிலந்தி வழிபட்ட தலமாக இந்த திருத்தலம் உள்ளது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில், இத்தலம் ‘ஞான சக்தி பீட’மாக உள்ளது.

இங்குள்ள ஜம்புகே ஸ்வரரை , அம்பாள் அகிலாண்டே ஸ்வரி தினமும் உச்சிகாலப்பொழுதில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே அந்த நேரத்தில்
அம்மனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை , கிரீடம், மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க, சிவன் சன்னிதிக்கு சென்று பூஜை செய்வார். இதனை அம்பாள் பூஜிப்பதாகவே கருதுகிறார்கள்.

மூலவர்: ஜம்புகேஸ்வரர்
உற்சவர்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்: வெண் நாவல்
தீர்த்தம்: நவ தீர்த்தங்கள், காவிரி

சுவாமி சன்னிதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, நின்ற நிலையில் வீணை
இல்லாமல் காட்சி தருகிறார். அருகில் கார்த்திகை , ரோகிணியுடன் சந்திரன் வீற்றிருக்கிறார்.

இந்த ஆலயத்தில் ஆடிவெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

நாவல் மரத்துக்கு ‘ஜம்பு’ என்று பெயர் உண்டு. அந்த மரத்தின் கீழ், அம்பாள் பிடித்த நீர் லிங்கம் அமைந்ததால், இத்தல இறைவன் ‘ஜம்புகே ஸ்வரர்’ ஆனார்.

ஜம்புகேஸ்வரர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தின் எதிரே வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் வழியாகத்தான் இறைவனை தரிசிக்க வேண்டும்.

குபேரன் பூஜித்த குபேரலிங்கம், ஜம்பு தீர்த்தங் கரையில் அமைந்துள்ளது. இவருக்கு ஆனி மாத பவுர்ணமி அன்று முக்கனியைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

கணவன் - மனைவி ஒற்றுமைக்கு, நல்லவரன் அமைய, விவசாயம் செழிக்க , தண்ணீர் பஞ்சம் நீங்க இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருவானைக்காவல் திருத்தலம்.

Next Story