ஆஸ்திரேலிய ஓபன் 2022- அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நட்சத்திர வீரர்கள்..!


ஆஸ்திரேலிய ஓபன்  2022-  அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நட்சத்திர வீரர்கள்..!
x
தினத்தந்தி 27 Dec 2021 9:58 AM GMT (Updated: 27 Dec 2021 9:58 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் தொடங்குவதற்கு 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பல்வேறு டென்னிஸ் நட்சத்திரங்களும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி தொடங்குகிறது. உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதி போட்டி ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடர் தொடங்குவதற்கு 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பல்வேறு டென்னிஸ் நட்சத்திரங்களும் கொரோனா தொற்று  நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர் மற்றும் பெலிண்டா பென்சிக் ஆகிருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அபுதாபியில் கடந்த வாரம் நடந்து முடிந்த முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றவர்கள்.தற்போது இந்த தொடரில் பங்கேற்ற மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 5 வது நிலை வீரரான ரஷ்யாவின்  ஆண்ட்ரே ரூப்லெவ் தற்போது கொரோனா தொற்று  நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் நடந்து முடிந்த  முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்றவர்.

இது குறித்து ஆண்ட்ரே ரூப்லெவ்  தெரிவித்துள்ளதாவது :

உங்கள் அனைவரிடமும்  சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் தற்போது பார்சிலோனாவில் இருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனக்கு கொரோனவுக்கான  சிறிய அறிகுறிகள் உள்ளன. நான் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். நான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி உள்ளேன்.

ஏடிபி கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன். நான் முழுவதுமாக குணமடைந்த பிறகுதான் ஆஸ்திரேலிய ஓபன்  தொடரில் பங்கேற்பேன்.தயவுசெய்து உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story