பூவால் பலியான கேரள இளம்பெண்: வெளிநாடு செல்லும் முன் நடந்த சோக சம்பவம்


பூவால் பலியான கேரள இளம்பெண்: வெளிநாடு செல்லும் முன் நடந்த சோக சம்பவம்
x
தினத்தந்தி 5 May 2024 7:16 AM GMT (Updated: 5 May 2024 8:28 AM GMT)

கேரளாவில் அரளிப்பூவை உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா சுரேந்திரன். இவர் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அண்டை வீட்டாரிடம் விடைபெறச் சென்றுள்ளார். திரும்பி வரும்போது செல்போனில் பேசியபடி, தன்னை அறியாமலே ஒரு அரளி இலையையும், ஒரு அரளிப் பூவையும் பிய்த்துத் தின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், இங்கிலாந்து செல்வதற்காக நெடும்பசேரியில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்ற சூர்யா, ஆலப்புழாவை அடைந்ததும் வாந்தி எடுத்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டாக்டர்கள் சூர்யா உட்கொண்ட பூவையும் இலையையும் துப்ப வைக்க முயன்றனர். பிறகு உடல்நிலை சற்று சீரானதும் அவர் வீடு திரும்பினார்.

ஆனால், சூர்யாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இதனால் பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அரளி விஷம் அவரது இதயத்தை பாதித்து உயிரை பறித்ததாக கூறப்படுகிறது.

அரளிப்பூவை உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், அக்கம்பக்கத்தினரையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரளிப்பூ இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அரளியை சிறிதளவு உட்கொண்டாலும் ஆரோக்கியமான நபருக்குக் கூட ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் அரளிப்பூவைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.


Next Story