பெண்கல்வி மிக அவசியமானது - ‘நல்லாசிரியர்’ தமிழ்ச்செல்வி


பெண்கல்வி மிக அவசியமானது - ‘நல்லாசிரியர்’ தமிழ்ச்செல்வி
x
தினத்தந்தி 13 Dec 2021 5:30 AM GMT (Updated: 11 Dec 2021 9:51 AM GMT)

பெண் ஒருவர் கல்வி கற்றால், அதன் மூலம் அந்தக் குடும்பமே கல்வி கற்றதாக மாறிவிடும். பெண் வேலைக்கு சென்று குடும்பத்தை உயர்த்துவதோடு, குழந்தைகளின் கல்வியிலும் கவனம் செலுத்தி அவர்களை உயரச் செய்கிறார்.

ருவர் தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ வகையான மனிதர்களை சந்தித்திருந்தாலும், ‘ஆசிரியர்’ என்பவர் ஏற்படுத்தும் தாக்கமும், உந்துதலுமே வாழ்நாள் முழுவதும் மேன்மையை நோக்கி அவரை வழிநடத்திச் செல்கிறது. எளிய மனிதர்கள் முதல் மா மேதைகள் வரை அனைவரின் வாழ்விலும் ஆசிரியரின் பங்கு அளப்பரியது. காத்தவராயனாக இருந்தவரை அயோத்திதாசராகவும், பீமாராவாக இருந்தவரை அம்பேத்கராகவும் அடையாளம் பெற வைத்ததும் ஆசிரியரே! ‘ஆசிரியர் என்றாலே நல்லவர்தான்’ என்பதே உலகியல் பார்வை.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க அறப்பணியை பாராட்டி, ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் ‘நல்லாசிரியர்’ விருதை, இந்த ஆண்டு பெற்றவர் தலைமையாசிரியை  தமிழ்ச்செல்வி. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது, இடைநிற்றலை நீக்கியது, பள்ளிகளில் நவீன கழிவறை ஏற்படுத்திக் கொடுத்தது, 

மரக்கன்று வளர்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்தியது, தம்முடைய மாணவர்களை பேச்சு, விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட படைப்பாற்றலில் ஊக்குவித்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பரிசுகளைப் பெற வைத்தது என பல்வேறு விருதுகளையும், நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார் தமிழ்ச்செல்வி. 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், அத்திப்புலியூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் நாற்புறமும் பசுமை போர்த்திய மரங்கள் படர்ந்திருக்க, மாணவர்களின் மழலை மொழிகளுக்கு இடையில் நம்மிடம் பேசத் தொடங்கினார்.


உங்களைப் பற்றி…?
நான் பிறந்த ஊர் கண்கொடுத்தவனிதம் கிராமம், திருவாரூர் மாவட்டம். படித்தது அரசு பள்ளி. பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தேன். தஞ்சாவூர் அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றேன். அதில் மாநிலத்தில் முதல் மாணவியாகத் தேர்வானேன். தந்தை தமிழ் ஆசிரியர். உடன்பிறப்புகள் இரு சகோதரிகள், இருவரும் ஆசிரியராக பணிபுரிகின்றனர். எனது கணவர், அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனக்கு இரண்டு மகள்கள்.

உங்களை கவர்ந்த ஆசிரியர்?
தஞ்சாவூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும்போது, ஆங்கில ஆசிரியை மற்றும் வகுப்பாசிரியையாக இருந்த இந்திரா நமச்சிவாயம். மற்றொருவர் கனகாம்புஜம், கீழ்வேளூர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தவர். கடின உழைப்பாளி, பணியின்போது அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தவர்.

உங்கள் பார்வையில் ஆசிரியப்பணி என்பது..?
பாடங்களை கற்பிப்பது மட்டுமின்றி, சிறந்த ஒழுக்கமுடைய, நற்பண்புகள் நிறைந்த மாணவர்களை உருவாக்குவதும்,  சிறந்த ஆசிரியரின் பணி என்று கருதுகிறேன். அதிலும் தலைமை ஆசிரியையாக இருப்பதால், மாணவர்களின் பெற்றோர், அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் பயனடையும் வகையில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது. அரசின் திட்டங்கள், தடுப்பூசி போடுவது, வாக்காளர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி மற்றும் பல பணிகள் உள்ளன.



‘நல்லாசிரியர் விருது’ வழங்கப்படுவதன் நோக்கம் குறித்து உங்கள் பார்வை என்ன?
மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதற்கு தான் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதனைப் பார்க்கும் மற்றவர்களுக்கு, நாமும் சிறப்பாக பணிபுரிய வேண்டும், விருது பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விருதுக்காக நாம் உழைப்பதில்லை. விருது கிடைக்கும் போது, நம் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இதை தக்க வைத்துக் கொள்வதற்கு  அதிகமாக உழைக்க வேண்டும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

செயல்வழி கற்றல் ஆசிரியர்-மாணவர்களுக்கு எவ்வகையில் பயனளிக்கிறது?
செயல்வழிக்கற்றல், ஆசிரியருக்கு கூடுதல் வேலை அளித்தாலும், மாணவர்கள் செய்முறையுடன் கற்பதால் எளிதில் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறது.

பாடநூலைத்  தாண்டி, மாணவர்களுக்கு வேறு ஏதாவது நீங்கள் கற்பிக்கிறீர்களா?
ஆம். பாடத்தோடு தொடர்புடைய, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய கருத்துக்களை இணைத்து கற்பிப்போம்.

தற்போதைய நிலைமைகளில், பெண் கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன?
பெண் கல்வி மிக அவசியமானது. பெண் ஒருவர் கல்வி கற்றால், அதன் மூலம் அந்தக் குடும்பமே கல்வி கற்றதாக மாறிவிடும். பெண் வேலைக்கு சென்று குடும்பத்தை உயர்த்துவதோடு, குழந்தைகளின் கல்வியிலும் கவனம் செலுத்தி அவர்களை உயரச் செய்கிறார்.

பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் உங்கள் வேண்டுகோள்?
பெற்றோர்களுக்கு, தினந்தோறும் பல்வேறு வேலைகள் இருந்தாலும், குழந்தைகளோடு முடிந்தவரை நேரம் ஒதுக்கி உரையாடுங்கள். குழந்தைகளின் கல்வியில் உதவி செய்யுங்கள்.

மதிய உணவு திட்டம் பயனுள்ளதாக இருக்கிறதா?
ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெற்றோர்கள், காலையில் வேலைக்குச் சென்று, மாலை வெகு நேரம் கழித்து வீடு திரும்புகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு சூடாக தினமும் முட்டையுடன் ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படுவது, பெற்றோர்களின் பணிச்சுமையைக் குறைக்கிறது. இந்த திட்டம் பயனுள்ளதாக உள்ளது.

உங்களை ஊக்குவிப்பவர்கள் யார்?
திருமணத்திற்கு முன்பு பெற்றோர். தற்போது கணவர்-குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

கல்வி பயிலும் மாணவர்களிடத்தில் செல்போன், கணினி உள்ளிட்ட சாதனங்களின் தாக்கம் குறித்து?
கொரோனா காலகட்டத்தில் வாட்ஸ்அப், வீடியோ கால் முதலியவை மூலம் மாணவர்களை தொடர்புகொள்ளவும், பாடங்கள் நடத்தவும் உதவியாக 
உள்ளது. இத்தகைய சாதனங்களை மாணவர்கள் தீய வழியில் பயன்படுத்தாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் பற்றி...?
கொரோனாவால் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக, அரசு கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டம். தன்னார்வலர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நிச்சயம் மாணவர் சமுதாயத்தின் கல்வி நிலை மேம்படும்.

அரசு பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு, அரசு என்ன செய்ய வேண்டும்?
அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களை முழுமையாக கல்விப்பணியில் ஈடுபடுத்தினால், மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும். 

Next Story