எளியவர்களுக்கு உதவும் தாய்-மகள்


எளியவர்களுக்கு உதவும் தாய்-மகள்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:30 AM GMT (Updated: 29 Jan 2022 11:46 AM GMT)

நாங்கள் முதன் முதலில் அப்துல் கலாமின் கனவுகளில் ஒன்றான, எல்லோரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற எண்ணத்தோடும், பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்றும் ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.

னது அம்மா செய்யும் சமூகப்பணிகளால் ஈர்க்கப்பட்டு,  ஒன்பது ஆண்டுகாலமாகப் பல சமூக சேவைகளைச்  செய்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த நிவரஞ்சனி.

இதோ அவரே பேசுகிறார்...

‘‘குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகளில் ஒன்று பிறருக்கு உதவுதல். இதை எனக்கு கற்றுத்தந்ததோடு, நான் சமூக சேவைகளைச்  செய்வதற்கு உற்றதுணையாக இருக்கிறார் என் அம்மா சவுந்திரம்.

நான் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு  இளங்கலை ஆங்கிலம்  படித்து வருகிறேன். என் அம்மாதான் என்னுடைய வழிகாட்டி. இந்த சமூகத்தின் மீதான நம்முடைய ஈடுபாட்டை, வெறும் வாய்ச்சொல் வார்த்தைகளாக இல்லாமல் செயலாக மாற்றவேண்டும் என்று சொன்னதோடு அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

நாங்கள் முதன் முதலில் அப்துல் கலாமின் கனவுகளில் ஒன்றான, எல்லோரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற எண்ணத்தோடும், பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்றும் ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.

அதன் மூலம் மரக்கன்றுகள் நடுவதன்  அவசியம் மற்றும் அளவற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இப்போதும் அந்தச் சேவையைத் தொடர்ந்து வருகிறோம். மேலும் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவுதல், கல்விக்கு  உதவுதல் என்று எங்களுடைய பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் உணவு இன்றியமையாதது. ஆனால் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு கிடைப்பதில் உள்ள சிக்கல், எங்களை ‘பசியில்லா உலகம் உருவாக்க வேண்டும்’ என்று சிந்திக்கத் தூண்டியது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும், சாலை யோர விலங்குகளுக்கும் உணவு கிடைத்திடும் வகையில் பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டோம்.

தினமும் அவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பதே, எங்கள் நோக்கமாக மாறிப்போனது.

கொரோனா காலகட்டத்தில் அதற்காக பலர் உதவிட முன்வந்தனர். அவர்களோடு இணைந்தபோது உணவு வழங்குதல் எளிதில் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறோம்’’ என்கிறார்.

இவர்களின் சேவைகளைப் பாராட்டி புதுச்சேரி வள்ளலார் சேவை இயக்கம், தமிழ்நாட்டில் சிறந்த  தன்னார்வலர்கள் 15 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது. இதற்கான விருதும் பெற்றுள்ளார் நிவரஞ்சனி.

‘‘இங்கு இன்றியமையாத தேவை உணவும், கல்வியும்தான். அவை இரண்டும் எல்லோருக்கும் கிடைக்க என்னால் முடிந்த வரை தொடர்ந்து செயல்படுவேன். எனக்கு பக்கபலமாக என் அம்மா இருக்கிறார். 

இன்னும் பலருக்கு உணவும், கல்வியும்  கிடைத்திடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினையே, என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.எனக்குள் இந்த எண்ணங்களை விதைத்தவர் என் அம்மா. அவரது பண்பும், சமூக அக்கறையுமே  வாழ்வில் என்னையும் சமூக ஆர்வலராக  உருவாக்கியது.

வாழ்வில் ஆகச்சிறந்த மகிழ்ச்சி பிறரை மகிழ்விப்பதுதான். நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வாழ்ந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்’’ என்கிறார் நிவரஞ்சனி. 

Next Story