தடகளத்தில் சாதித்த நடிகை ஹரிதா


தடகளத்தில் சாதித்த  நடிகை ஹரிதா
x
தினத்தந்தி 7 Feb 2022 5:30 AM GMT (Updated: 5 Feb 2022 8:09 AM GMT)

அழகுப் பதுமையாக வந்து சிறிது காலத்தில் காணாமல் போகும் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. படத்தின் கதையை சுவாரசியமாகக் கொண்டு செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

ல்வேறு திரைப்படங்களில், தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை ஹரிதா. தடகள வீராங்கனை, கதை சொல்லி எனப் பல திறமைகள் கொண்டவர். அவரது பேட்டி…

“சென்னையில் பிறந்த நான், கடலூரில் பள்ளிப் படிப்பை முடித்தேன். பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். சிறு வயதிலேயே எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது. 10 வயதிலேயே விளையாட்டு மைதானத்திற்குச் சென்றுவிட்டேன். ‘ஏதோ விளையாடுகிறாள்' என்றுதான் பெற்றோர் முதலில் புரிந்து கொண்டார்கள். விளையாட்டில் என்னுடைய ஆர்வமும், ஈடுபாடும் காலப்போக்கில்தான் அம்மா மணிமேகலைக்குப் புரிந்தது. அதற்குப்பின் விளையாட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தருவது, காலையில் குறித்த நேரத்தில் எழுப்பி காபி கொடுத்து அனுப்புவது என எனக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார். 

ஆரம்பத்தில் இறகுப்பந்து விளையாடினேன். நடுத்தர குடும்பம் என்பதால், பெற்றோரால் விளையாட்டுக்குக் கூடுதல் செலவு செய்ய முடியவில்லை. எனவே இறகுப்பந்து விளையாட்டை கைவிட்டேன். கட்டணம் இல்லாத விளையாட்டில் கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்து தடகள விளையாட்டில் சேர்ந்தேன். அதில் சிறப்பாக விளையாட முடிந்தது. அதன் பிறகு மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். பள்ளி அளவில் நல்ல முறையில் விளையாடியதால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

விளையாட்டில் எனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி பதக்கங்களைக் குவித்தேன். பள்ளிக் கல்விக்குப்பின் கணினி அறிவியலில் பொறியியல் படித்தேன். அங்கும் எனக்கான விளையாட்டுக் களம் தொடர்ந்த நிலையில், படிப்பு, விளையாட்டுப் பயிற்சி இரண்டிலும் கவனம் செலுத்துவது கடினமாக இருந்தது. நெருக்கடிகள் இருந்தாலும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தால் இந்தக் களம் என்பது எனக்கு சிரமமாகத் தெரியவில்லை. இதற்கிடையில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தது.



தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால் விருப்பம் இல்லாத காரணத்தால் அதில் இருந்து விலகினேன். பின்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டு திரைத்துறைக்குப் போகலாம் என முடிவு செய்து முயற்சித்தேன். அதன்பிறகு முதன் முதலாக விளம்பரத்திற்கு ‘டப்பிங்’ செய்தேன்.

அப்போது ‘மேடி அலைஸ் மாதவன்’ என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. ‘மாடி என்கிற மாது’, ‘ஜிப்ஸி’, ‘என்.ஜி.கே’, ‘சூரரைப்போற்று’, சமீபத்தில் வெளிவந்த ‘க்’ மற்றும் ‘சத்தியசோதனை’ உட்பட 6 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘க்’ படம் என்னுடைய குரலில் தான் தொடங்கும். ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற குறும்படத்திலும், ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளேன். 

அழகுப் பதுமையாக வந்து சிறிது காலத்தில் காணாமல் போகும் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. படத்தின் கதையை சுவாரசியமாகக் கொண்டு செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நடிகைகள் சுஜாதா, லட்சுமி போல் நடித்து, காலத்தை மீறி சினிமாவில் இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

என்னுடைய குரு, எழுத்தாளர் கீதாகைலாசம் ஒருமுறை ‘நீ ஏன் கதை சொல்லக்கூடாது (ஸ்டோரி டெல்லிங்) என்று ஆலோசனை கொடுத்தார்.  பின்பு நான் அவரிடமே கதைகளை எப்படி சொல்ல வேண்டும் என கற்றுக் கொண்டேன். சிறுவயதில் இருந்தே நாம் எல்லோரும் ஏதாவதொரு கதையைக் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறோம். அந்த வகையில் கதை சொல்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. கதைகளை ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா...’ என்பது மாதிரி சொல்லாமல், கதைக்கு ஏற்றவாறு முக பாவனையுடன் நடித்துக் காட்டி சொல்லுவேன். 

பறவைகள் என்றால் கைகளை இறக்கை போல விரித்தவாறு நடித்தும், விலங்குகள் பற்றி சொல்லும்போது அதற்கு ஏற்ப ஒலி எழுப்பியும் சொல்லுவேன். சின்னச் சின்ன பொம்மைகள் பயன்படுத்தி பொம்மலாட்டம் போல் கதை சொல்வேன். சின்னச் சின்ன படங்கள், கார்ட்டூன் ஆகியவற்றை வரைந்து கொண்டே கதை சொல்லித்தருவேன். என்னைப் பொறுத்தவரை என்னிடம் கதை கேட்பவரின் கற்பனைத்திறன் அதிகரிக்க வேண்டும்.

சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை சொல்லுவேன். அந்த வகுப்பு நிறைவில் நல்ல கதைகள் கேட்டோம் என்பதை விட, நாமும் கதை சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் என்னுடைய வகுப்பு இருக்கும்” என்றார்.

Next Story