திருமண ஆடைகளை திறமையாக வடிவமைக்கும் சபியா


திருமண ஆடைகளை திறமையாக வடிவமைக்கும் சபியா
x
தினத்தந்தி 14 Feb 2022 5:30 AM GMT (Updated: 12 Feb 2022 7:08 AM GMT)

வாடிக்கையாளர்களின் கற்பனையில் இருக்கும் ஆடை வடிவமைப்பை, நிஜத்தில் கொண்டுவருவதே எனது தனித்துவ அடையாளம். நான் வடிவமைக்கும் ஆடைகளில் உள்ள நேர்த்திக்கான காரணமாக இதைச் சொல்லலாம்.

‘முயற்சியும், தொடர் உழைப்பும் இருந்தால்  சீக்கிரமே வெற்றி பெறலாம்’ என்கிறார் திருச்சியைச் சேர்ந்த சபியா பாரி. இளம் தொழில் முனைவோராக தனது வெற்றி குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை இங்கே..

“என் குடும்பப் பாரம்பரியமும், தொழில் முனைவோராக அவர்கள் எடுத்து வைத்த பாதைகளும், எனக்கும் தொழில் முனைவோராகும் எண்ணத்தை உண்டாக்கியது.

ஆடைகள் வடிவமைப்பில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. எனவே ‘மணமகளுக்கான சிறப்பு ஆடைகள் தயாரிப்பதில் ஈடுபடலாம்’ என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமண ஆடைகள் வடிவமைக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

முந்தைய காலத்தில் திருமணங்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நடைபெறும். அந்த வழக்கம் மாறி, தற்போது முதல் நாள் மாலை வேளையில் தொடங்கி, மறுநாள் மாலை வேளை வரை என ஒரே நாளாக சுருங்கிவிட்டது. இருந்த போதும் அந்த நாளில் நிச்சயதார்த்தம், திருமணச் சடங்குகள், அதைத் தொடர்ந்து நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கையில் மருதாணி வைக்கும் நிகழ்ச்சி தனியாக நடத்தப்படுவதும் உண்டு.

எப்பொழுதுமே மணப்பெண்கள் தங்களுடைய ஆடைகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். மெஹந்தி நிகழ்ச்சிக்கு புடவை, ரிசப்ஷனுக்கு லெகங்கா, திருமணப்  பட்டுப்புடவை, தொடர்ந்து நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ‘முந்தானை மாற்றி அணியும் புடவை’ என விதவிதமான ஆடைகளை அணிந்து கொள்ளவே இன்றைய மணப்பெண்கள் விரும்புகின்றனர். ‘ரெடிமேட் ரகங்கள் வேண்டாம்’ என்றும், ‘தனிப்பட்ட முறையில் சிறப்பான திருமண ஆடைகள் தயாரித்து அணிய வேண்டும்’ என்றும் இன்றைய மணப்பெண்கள் விரும்புகிறார்கள்.



திருமண விழாவில் பெரும்பாலும் மணமகளுக்கு அலங்காரங்கள் அதிகமாக இருக்கும். அதற்கு இணையான வகையில், மணமகனுக்கும் ஆடைகள் தயார் செய்து தருகிறோம்.

வாடிக்கையாளர்களின் கற்பனையில் இருக்கும் ஆடை வடிவமைப்பை, நிஜத்தில் கொண்டுவருவதே எனது தனித்துவ அடையாளம். நான் வடிவமைக்கும் ஆடைகளில் உள்ள நேர்த்திக்கான காரணமாக இதைச் சொல்லலாம். 

கொரோனா காலகட்டத்தில் நடைபெற்ற திருமணங்களுக்கு, இணைய வழி வீடியோ அழைப்பு மூலம் ஆர்டர்கள் பெற்று, வாடிக்கையாளர் விரும்பிய வண்ணங்களில், வடிவங்களில் ஆடைகளைத் தயாரித்து வழங்கினேன். திருமணத்திற்கு மட்டுமின்றி,  மாடலிங் துறைக்கும் ஆடை வடிவமைப்பு செய்து வருகிறேன்.

வாடிக்கையாளர்களைத் தொடர்பு  கொள்வதற்கு சமூக வலைத்தளங்கள் உதவியாக உள்ளன. ‘ஆடை வடிவமைப்பு’ என்றால் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களைத்தான் எல்லோரும் பெரிதாக விரும்புவார்கள். ஆனால், திருச்சி போன்ற வளரும் நகரத்தில் இருந்து ஆடை வடிவமைக்கும் எனக்கு, பெரு நகரங்களில் உள்ளவர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

அதேபோன்று வெளிநாடுகளில் இந்திய ஆடை ரகங்களுக்கென்று தனி மதிப்பு உள்ளது. தற்போது, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் மணமகள் அணியும் லெகங்கா ஆடை ரகங்கள், வெளிநாடுகளில் அணிவது போன்றதே. அதேசமயம் நமது பாரம்பரிய ஆடை ரகங்களும், அதற்கு அணியும் ரவிக்கை மாடல்களும் வெளிநாடுகளில் வரவேற்பு பெற்று வருகிறது.

வாடிக்கையாளர்களில் சிலர் ஆடை வடிவமைப்பு ரகங்கள் குறித்து முழுத்தெளிவுடன் வருவார்கள். சிலர் அது பற்றிய தெளிவு இல்லாமல் வருவார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு எனது அணுகு முறை இருக்கும். ஆடையில் ஏதாவது குறை தென்பட்டால், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகம் ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் மறுசீரமைப்பேன்.

திருமண ஆடைகள் வடிவமைப்பது மட்டுமில்லாமல், பெண்கள் பார்ட்டிக்குப் பயன்படுத்தும் ஆடைகள், இரவு நேர ஆடைகள், போட்டோ ஷூட்டுக்கான சிறப்பு ஆடைகள், அம்மா-மகள் ஒருமித்த வடிவமைப்பு ஆடைகள், பிறந்தநாள் விழாவுக்கான ஆடைகள், மேல்நாட்டு ஆடை ரகங்கள் என்று பலவிதமாக வடிவமைக்கிறேன்.

ஆடை வடிவமைப்பில் மணி, பாசி ரகங்கள், கண்ணாடி இழைகள் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கிறேன். வடநாட்டு பாணி ஆடைகள், தமிழ்க் கடவுள்களின் உருவங்கள், வடதென் கலைகளின் வடிவங்கள் ஒருங்கே பெற்ற ஆடைகளை வடிவமைப்பதுதான் எனக்கான தனி அடையாளம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சவால்கள் இருக்கும். அதன்படியே நானும்  ஆடை வடிவமைப்புத் தொழிலில் சில சவால்களை சந்தித்தேன். ஆனால், நம்முடைய தனித்துவத்தை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தால், நமக்கான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்.

என்னைப்போல யார் வேண்டுமானாலும் தொழில் முனைவோராக ஆகலாம். நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் உள்ள நன்மை-சவால்களை அறிந்து, தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டால் அனைவரும் வெற்றி பெறலாம். எந்தத் துறையை தேர்வு செய்தாலும், முழுமையான பயிற்சியோடும், முழு முயற்சியோடும் ஈடுபடுதல் அவசியமானது.

பெண்கள் குடும்பம், வேலை இரண்டையும் சரியான நேர மேலாண்மையோடு கையாளும்போது இரண்டிலும் வெற்றி பெறலாம்” என்கிறார் சபியா.

Next Story