‘காதல்தான் இயங்க வைக்கிறது’ - பிளாரன்ஸ் ஹெலன் நளினி


‘காதல்தான்  இயங்க வைக்கிறது’  - பிளாரன்ஸ் ஹெலன் நளினி
x
தினத்தந்தி 14 Feb 2022 5:30 AM GMT (Updated: 12 Feb 2022 7:15 AM GMT)

கொரோனா தொற்று ஏற்பட்டபோது பிழைப்பேன் என்று கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. 8 மாதம் வெளியே வரவே இல்லை. அந்த அளவுக்கு உடல் நிலை மோசமாக இருந்தது.

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்கக்கூட சக்தி இல்லாமல், போராட்டமே வாழ்க்கையாக 29 நாட்களை கடந்தவர், மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு மீண்டு வந்தவர், சென்னையைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி. மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பல்துறை வித்தகராக திகழும் அவரது அனுபவங்கள் இங்கே...

உங்களைப் பற்றி?
என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் வளர்ந்தது சென்னையில். எனது குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. லைப் சயின்ஸ் முடித்தேன். போதுமான வசதி இல்லாததால், டியூசன் வகுப்புகள் நடத்தி அதன் மூலமாக வந்த பணத்தை வைத்துதான் படித்தேன். தற்போது உளவியலில் ஆராய்ச்சி படிப்பை தொடர்கிறேன். ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மொழிகளை பயிற்றுவிக்கிறேன். இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

‘திருமதி இந்தியா’ போட்டியில் பங்கு பெற்றது பற்றி கூறுங்கள்?
நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சமயம், எனது இளைய மகள் சரிஹா இந்தப் போட்டியைப் பற்றி தெரிவித்தாள். அவள் கூறியபோது கிண்டலாக சொல்வதாகவே நினைத்தேன். ஆன்லைனில்தான் பெரும்பாலான போட்டிகள் நடைபெறும் என சொன்னதால் அதில் பங்கு பெற்றேன். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் 3,000 பேர் பங்கேற்றார்கள். அதிலிருந்து 52 பேர் தேர்வு செய்யப்பட்டோம். தமிழ்நாடு சார்பாக நான் மட்டுமே பங்கெடுத்தேன். எனக்கு மாடலிங் துறையில் எந்த அனுபவமும் கிடையாது. ஆனால் போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்.

போட்டியில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்ச்சிக்கான சுற்றில், நான் ட்ரீம் பிலீவ் பவுண்டேஷன் மூலம், படிக்கும் திறமை இருந்தும் கல்வி கற்க முடியாத குழந்தைகளுக்கு, அதிக அளவில் நிதி திரட்டிக் கொடுத்து அவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்க வழிவகை செய்தேன்.

அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியில் ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிப் போட்டி மும்பையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை வென்றேன். இதே போட்டியில் ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தையும் வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது.

கொரோனாவில் இருந்து மீண்ட தருணங்கள் குறித்து?
என் கணவர், இரண்டு மகள்கள் உட்பட வீட்டிலுள்ள 6 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் மற்ற 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட 9-வது நாளில் நானும் பாதிக்கப்பட்டேன். அவர்களை தனி அறைகளில் பராமரித்து மீட்டபோது, எனக்கும் தொற்று பரவி இருந்தது.

எனக்கு கொரோனாவுடன், நிமோனியா காய்ச்சலும் உண்டாகி இருந்ததால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தது. தொடர் இருமல் மற்றும் பாதிப்புகளால் அவதியுற்றேன். அப்போதெல்லாம் என் கணவர்தான் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். ஆறுதல் கூறி என்னை தேற்றிக்கொண்டே இருந்தார். அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எனக்கான எல்லா தேவைகளையும் செய்தார். கொரோனாவிலிருந்து என் மன தைரியத்தாலும், குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த ஆதரவாலும் வெற்றிகரமாக மீண்டேன்.

அழகிப் போட்டிக்காக உங்களை எப்படி தயார் செய்கிறீர்கள்?
யோகா, பாடல், நடனம், ரேம்ப் வாக் என பல்வேறு போட்டிகள் நடக்கும். அதனால் காலையில் யோகா, ஜிம் வகுப்புகளுக்கும், மாலையில் நடனம், நீச்சல் ஆகிய வகுப்புகளுக்கும் சென்று போட்டிகளுக்காக என்னை தயார் செய்து வருகிறேன்.



உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத தருணம்?
எனது காதல் கணவர் சீனிவாச ராவ், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். கல்லூரியில் படித்தபோது, பேருந்து நிறுத்தத்திலும், கம்ப்யூட்டர் சென்டரிலுமான சந்திப்புகளில், திடீரென ஒருநாள் வந்து அவரது காதலை சொன்னார். பல சிரமங்களுக்கு பின்பு வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம்.

என் 2-வது மகள் பிறந்தபோது, 8-வது மாதத்தில் கீழே விழுந்து அடி பட்டதால் படுக்கையிலேயே ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட சிக்கல் காரணமாக எனக்கு உடல் ஒரு பக்கம் செயல் இழந்து விட்டது. குழந்தையை தூக்கி பால் கொடுப்பது முதல், எனக்கு நாப்கின் மாற்றியது வரை எல்லாமே என் கணவர்தான் செய்தார். நான் வாழ்க்கையை முழுதாக வாழ்வதற்கு, என்னுடைய கணவர்தான் காரணம். அந்த காதல்தான் எங்களை இப்போதுவரை இயங்க வைக்கிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டபோது பிழைப்பேன் என்று கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. 8 மாதம் வெளியே வரவே இல்லை. அந்த அளவுக்கு உடல் நிலை மோசமாக இருந்தது. ஆனால் என் கணவர் மற்றும் மகள்களின் நேர்மறை எண்ணம்தான் என்னை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது மட்டுமில்லாமல், ‘திருமதி உலக அழகி’ போட்டியில் கலந்துகொள்ளவும் வைத்துள்ளது. 

உளவியல் நிபுணர், தொழில் முனைவோர் போன்ற பணிகளுக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?
மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சிகளை நடத்தி வருகிறேன். கொரோனா காலம் என்பதால், தற்போது அனைத்து சந்திப்புகளையும் ஆன்லைனில் திட்டமிடுகிறேன். உளவியல் ஆலோசனைக்காக அணுகுபவர்கள் பிரச்சினைகளை முதலில் தொலைபேசி மூலம் தெரிவிப்பார்கள். அதைப் பொறுத்து, உளவியல் பிரச்சினைகளுக்கு நேரில் கவுன்சலிங் கொடுக்க வேண்டுமா? போனில் பேச வேண்டுமா? என்பதை முடிவு செய்வேன். குடும்ப ஆலோசனை, ஹிப்னோதெரபிஸ்ட், உணர்ச்சி நுண்ணறிவு போன்ற உளவியல் முறைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுகிறேன்.

மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெண் தொழில் முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கான வாய்ப்புக்களை தேடித் தருகிறேன்.

யோகா பயிற்சியாளராகவும் இருக்கிறேன். யோகா பயிற்சியை, தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நுரையீரல், சுவாசக்குழாய் போன்ற உறுப்புகள் வலுவடையும்.

உங்கள் இலக்கு என்ன?
‘திருமதி உலக அழகி’ போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ளப்போகிறேன். அதில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக அனைத்து முயற்சிகளையும், பயிற்சிகளையும் எடுத்து வருகிறேன். 

Next Story