82 வயதில் விண்வெளிக்கு பயணித்த வாலி பங்க்


82 வயதில் விண்வெளிக்கு பயணித்த வாலி பங்க்
x
தினத்தந்தி 14 Feb 2022 5:30 AM GMT (Updated: 12 Feb 2022 7:23 AM GMT)

பங்க் விண்வெளி செல்வதற்காக பலமுறை நாசாவில் விண்ணப்பித்தார். பொறியியல் பட்டம் பெறாத காரணத்தால், ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

‘கனவுகளை நனவாக்குவதற்கு வயது தடையில்லை’ என்பதை, உலக பெண்களுக்கு உணர்த்தியுள்ளார் வாலி பங்க். 60 ஆண்டுகளாக விடாமுயற்சி செய்து விண்ணைத் தொட்டு சாதித்து விட்டார். இதன் மூலம் ‘உலகில் மிக அதிக வயதில் விண்வெளிக்கு சென்றவர்’ என்ற பெருமையைப் பெற்றார்.

பங்க் மெக்சிகோ நாட்டில் 1939-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதில் இருந்தே விமானங்கள் வானில் பறப்பதை ஆர்வத்துடன் கவனித்து வந்தார். மரக்குச்சிகளைக்கொண்டு விமான பொம்மைகளை செய்து விளையாடினார். அவரைப் புரிந்துகொண்ட அவரது தாய், ‘இவள் நிச்சயம் ஒரு நாள் பறப்பாள்’ என கூறிவந்தார்.

துறுதுறுப்பான பெண்ணான பங்க் பைக் ஓட்டுதல், குதிரை சவாரி, பனிச்சறுக்கு, மீன் பிடித்தல், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். விமானங்கள் மீது இருந்த ஆர்வத்தால், விமானம் இயக்கும் பயிற்சி பெற்று, 1958-ம் ஆண்டு பைலட் உரிமம் மற்றும் அசோசியேட் ஆப் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றார். சிறந்த பெண் விமானி விருதையும் பெற்றார். தனது 20-வது வயதில் பங்க் தொழில்முறை விமானி ஆனார். அமெரிக்க ராணுவ தளத்தில் முதல் பெண் விமான பயிற்சியாளராக பணியாற்றினார்.

தலைமை விமானி, விமான ஆய்வாளர், கள ஆய்வாளர், விமான பாதுகாப்பு ஆய்வாளர் போன்ற பணிகளில் முதல் பெண்ணாக பணியாற்றினார். 450-க்கும் மேற்பட்ட விமான விபத்துகளை விசாரித்து காரணத்தை கண்டறிந்திருக்கிறார். பல விமான பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.

விமானியாக பல சாதனைகள் படைத்தாலும், விண்வெளி வீரராக விண்ணுக்கு செல்ல வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. 1961-ம் ஆண்டு விண்வெளிக்கு செல்வதற்காக ‘நாசா’ மூலம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்ட 13 பெண்களில் பங்க்கும் ஒருவர். ஆனால், இறுதியில் பெண்கள் விண்வெளி செல்வதற்கான திட்டம் கைவிடப்பட்டது.

இருந்தபோதும் பங்க் விண்வெளி செல்வதற்காக பலமுறை நாசாவில் விண்ணப்பித்தார். பொறியியல் பட்டம் பெறாத காரணத்தால், ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

“நீ ஒரு பெண், உன்னால் விண்வெளிக்கு செல்ல முடியாது என்று என்னிடம் பலர் கூறினார்கள். நீங்கள் யார் என்பது முக்கியம் இல்லை. ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களால் செய்ய முடியும் என்று அவர்களிடம் கூறினேன்” என்றார் பங்க்.

‘தொடர்ந்து முயற்சித்தால் எப்போதும் வெற்றி பெற முடியும்’ என்பதற்கு சான்றாக, உலகின் பெரிய செல்வந்தரான ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க் மற்றும் ஒரு பயணியுடன், புளூ ஆரிஜின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி சிறப்பு விருந்தினராக விண்வெளிக்கு பயணம் சென்று வந்தார் பங்க்.

“விண்வெளியில் பயணித்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது நீண்டதாக இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார் பங்க். 

Next Story