சிறு வயதிலேயே சொந்தமாக தொழில் செய்யும் வினுஷா!


சிறு வயதிலேயே சொந்தமாக தொழில் செய்யும் வினுஷா!
x
தினத்தந்தி 21 Feb 2022 5:30 AM GMT (Updated: 19 Feb 2022 12:14 PM GMT)

என்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு, நானே கேக் தயாரித்துக் கொடுத்தபோதுதான், அது எனக்கு மிகவும் பிடித்த வேலையாக இருப்பதை உணர்ந்தேன்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த வினுஷா, சிறு வயதிலேயே பேக்கரி பொருட்களை தயாரிப்பதில்  ஜொலித்து வருகிறார். ‘கப் கேக்குகள்’ மீது கொண்டிருந்த விருப்பம் காரணமாக, அவற்றைத் தயாரிப்பதற்குக் கற்றுக்கொண்டார். இப்போது விதவிதமான ‘கப் கேக்குகள்’ தயாரித்து விற்பனை செய்கிறார். தனது அம்மாவின் துணையோடு, பேக்கரியை நடத்தி வருகிறார். பத்து வயதுக்குள்ளேயே பல விருதுகளையும், கவுரவங்களையும் பெற்றிருக்கிறார். அவரது நேர்காணல்...

உங்களைப் பற்றி?
ராமநாதபுரம் மாவட்டம் மொச்சிகுளம் கிராமம்தான் எனது சொந்த ஊர். தாய் கவிதா, பாலர் பள்ளி நடத்தி வருகிறார். தந்தை முத்துராமலிங்கம், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணி செய்கிறார். நான் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். 

சிறுவயதிலேயே வியாபார ரீதியில் ‘கப் கேக்’ செய்யும் ஆர்வம் எப்படி வந்தது?
எனக்கு எட்டு வயதானபோது, எப்போதும் கேக் தயாரிக்கும் வீடியோக்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். எனது ஒன்பதாவது வயதில், என்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு, நானே கேக் தயாரித்துக் கொடுத்தபோதுதான், அது எனக்கு மிகவும் பிடித்த வேலையாக இருப்பதை உணர்ந்தேன். எனவே கேக் தயாரிப்பை சிறப்பாகக் கற்றுக்கொள்வதற்காக, பல வகுப்புகளில் பங்கேற்றேன்.

அதன்பிறகு ‘ஏன் நாமும் நமது சொந்த பிராண்டை உருவாக்கக் கூடாது?’ என்று தோன்றியது. அதன் விளைவாக 2019-ம் ஆண்டு எனது பேக்கரியைத் தொடங்கினேன். அதற்காக நட்சத்திர ஓட்டலிலும், பெரிய கேக் தயாரிப்பு நிறுவனங்களிலும் பயிற்சி பெற்றேன். 

உங்கள் பேக்கரியை  எப்படி வெற்றிகரமாக நடத்துகிறீர்கள்?
பெரிய நிகழ்ச்சிகளில் ‘ஸ்டால்’ அமைப்பதோடு, ஆன்லைனிலும் ஆர்டர்களைப் பெறுகிறேன். எனது அடையாளமாகத் திகழ்வது ‘கப் கேக்’குகள்தான். மேலும் கேக், சாக்லேட், சாண்ட்விச் போன்றவற்றையும் விற்பனை செய்கிறேன். 7 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த ஆன்லைன் வகுப்புகளையும் எடுக்கிறேன். இதுவரை 500-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியை அளித் திருக்கிறேன்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
பிரபல தனியார் நிறுவன தலைமை அதிகாரியின் பாராட்டைப் பெற்றிருக்கிறேன். தனியார் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில், சமையல் கலைஞர் தாமுவுடன் சேர்ந்து சமைத்திருக்கிறேன். பண்பலை வானொலியின் ‘சேஞ்ஜ் மேக்கர்’ விருதைப் பெற்றிருக்கிறேன். 
 
உலகளாவிய தொழில் முனைவோர் அமைப்பின் இளம் உறுப்பினராகிய நான், பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சிறப்புரையாற்றியிருக்கிறேன். சர்வதேச தொலைக்காட்சியில் எனது சமையல் நிகழ்ச்சி ரஷ்யன் மற்றும் ஆங்கில மொழிகளில் 12 பகுதிகளாக ஒளிபரப்பானது. இதுபோன்று இன்னும் பல கவுரவங்களையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். 

Next Story