விமர்சனங்களைத் தாண்டி வெற்றி பெற்ற நந்தினி


விமர்சனங்களைத் தாண்டி வெற்றி பெற்ற நந்தினி
x
தினத்தந்தி 14 March 2022 5:30 AM GMT (Updated: 12 March 2022 10:34 AM GMT)

மாடலிங் துறையைத் தேர்வு செய்தபோது பல சவால்கள் என் முன் இருந்தன. கிராமத்தில் இருந்து வருகிறேன் என்பதையும், என்னுடைய உயரத்தையும் காரணம் கூறி பல இடங்களில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.

மாடலிங் துறையில் நவ நாகரிக மங்கைகள் மட்டுமில்லாமல், சாதாரண சூழலில் வளர்ந்த பெண்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி. ஆலத்தம்பாடி எனும் ஊரில் தனது அம்மாவுடன் வசித்து வரும் அவர் ஆர்வத்தாலும், தன்னம்பிக்கையாலும் இந்த நிலையை எட்டி இருக்கிறார்.

ஆங்கிலத்தில் இளங்கலை படித்திருக்கும் நந்தினி 26 வயதில் மாடலிங், விளம்பரங்களில் நடிப்பது, பங்குச் சந்தையில் ஈடுபடுவது  என தன்னுடைய பன்முகத்திறமை மூலம் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரது பேட்டி…

உங்களைப் பற்றி?
டிப்ளமோ முடித்து விட்டு சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்து ஒருங்கிணைக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் ‘96' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் மாடலிங் துறை பற்றி அறிந்து அதில் பயணிக்கத் தொடங்கினேன்.

மாடலிங் துறையில் உங்களது பயணம் குறித்து?
மாடலிங் துறையைத் தேர்வு செய்தபோது பல சவால்கள் என் முன் இருந்தன. கிராமத்தில் இருந்து வருகிறேன் என்பதையும், என்னுடைய உயரத்தையும் காரணம் கூறி பல இடங்களில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு ஏற்பட்ட பல அவமானங்களும், நிராகரிப்புகளும் இந்தத் துறையில் சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து முயற்சித்தேன். 2017-ம் ஆண்டு என்னைப்போல வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து, ஒரு குழுவாக இணைந்து ‘தனிப்பாடல்’ ஒன்றை நாங்களே உருவாக்கினோம்.

அதைத்தொடர்ந்து சிறு நிறுவனங்கள் போர்ட்போலியோ, போட்டோஷூட், பார்லர் விளம்பரங்கள் போன்றவற்றில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தன. நாளடைவில்  பலருக்கும் அறிமுகமாகவே தனியார் நிறுவனத்தின் பிராண்ட் மாடலாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான விளம்பரங்களில் நடிப்பது, பிரமோஷன்களில் பங்கேற்பது, தியேட்டர் விளம்பரங்கள், துணிக்கடை விளம்பரங்களில் நடிப்பது என்று வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

உங்களுக்கான தனித்துவம் பற்றிக் கூறுங்கள்?
பலரும் இந்தத் துறையைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் இதில் நீடிப்பது சவாலானது.

எங்கு இருக்கிறோம் என்பதைத் தாண்டி, கொடுக்கப்பட்ட பணியை எப்படி செய்கிறோம், நம்மை எப்படி உலகிற்குக் காட்டிக் கொள்கிறோம் என்பதில் கவனமாக இருந்தேன்.

எல்லாவற்றையும் செய்வதை விட, சிறந்த ஒன்றைச் செய்வதே சரியாக இருக்கும் என்று தேர்வு செய்து அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

இந்தத் துறையில் பயணிப்பதற்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்து, ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றேன்.

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள்தான் பெரும்பாலும் இத்துறையைத் தேர்வு செய்வார்கள். ஏனெனில் அவர்களுக்கு இது குறித்த தெளிவு இருக்கும். ஆனால் கிராமப்புறங்களில் இது குறித்த புரிதல் இல்லாததால் பலரும் எதிர்த்தனர். இருந்தாலும் என்னுடைய திறமையை மட்டுமே நம்பி இந்தத் துறையைத் தேர்வு செய்தேன்.

குடும்பத்தினரின் ஆதரவு எவ்வாறு உள்ளது?
அம்மாவிற்கு முதலில் பயம் இருந்தாலும், என்னுடைய தன்னம்பிக்கையைப்  பார்த்து ஒப்புக்கொண்டார். தாத்தா-பாட்டியும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். இவர்கள் மூவரும் என் பக்கம் நின்றதே, என்னை மேலும் நம்பிக்கையோடு பயணிக்க வைத்தது. என் தோழி உமா என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

பங்குச் சந்தையில் ஆர்வம் வந்தது எப்படி?
வறுமை மிகப் பெரிய ஆசான். என்னுடைய பள்ளிப் பருவத்தில் கூரை வீட்டில்தான் வசித்தோம். கஜா புயலின் போது அதுவும் இல்லாமல் ஆயிற்று. அக்கம்பக்கத்தினர் உதவியோடு அந்த வீட்டை சீர்படுத்தி அதிலேயே வாழ்ந்து வந்தோம்.


அப்போதெல்லாம் ‘நம்முடைய வறுமையை போக்க வேண்டும்’ என்று பலமுறை சிந்தித்திருக்கிறேன். அதனாலேயே பயணிக்க வேண்டிய துறையைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். மாடலிங் துறையைத் தேர்வு செய்த பிறகு அனுபவசாலிகளின் நட்பின் மூலம்  மார்க்கெட்டிங் குறித்த தெளிவும் கிடைத்தது. அதன் பிறகுதான் பங்குச் சந்தையில் பயணிக்கத் தொடங்கினேன். இன்று இதிலும் வெற்றி பெற்று வீடு இல்லாமல் தவித்த என் அம்மா, பாட்டிக்கு சொந்தமாக வீடு, கார் என நல்லதொரு வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வருகிறோம்.

கிடைத்த விருதுகள் பற்றி?
2019-ம் ஆண்டு தென்னிந்திய பெண் சாதனையாளர்களுக்கான சிறந்த கலைஞர் விருது, 2020-ம் ஆண்டு தேசிய அளவில் சிறந்த கலைஞர் விருது, 2021-ம் ஆண்டு மதிப்புறு டாக்டர் பட்டமும் பெற்றேன்.

உங்கள் இலக்கு என்ன?
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக எல்லா வகையிலும் என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும். இப்பொழுது சில மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு உதவி வருகிறேன். எதிர்காலத்தில்  வறுமையால் கல்வி கற்க இயலாதவர்களுக்கு முழுச் செலவையும் ஏற்றுப் படிக்க வைக்க வேண்டுமென்பது என்னுடைய இலக்கு. 

Next Story