பச்சிளம் குழந்தைகளின் உயிர் காத்த வர்ஜினியா அப்கார்


பச்சிளம் குழந்தைகளின் உயிர் காத்த வர்ஜினியா அப்கார்
x
தினத்தந்தி 4 April 2022 5:30 AM GMT (Updated: 2 April 2022 1:24 PM GMT)

அமெரிக்காவின் முதல் மயக்க மருந்து வல்லுநர்களுக்கான பட்டப்படிப்பு கல்வி விஸ்கான்சின் மாகாணத்தின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. 1937-ம் ஆண்டில் அங்கே ஆறு மாதம் பட்டயப் படிப்பைப் படித்தார் வர்ஜினியா.

ர்ப்பிணி பெண்கள் பிரசவிக்கும் அறையில், குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரும் உடன் இருப்பார். அவர் ‘அப்கார் கணக்கு’ என்ற அளவுகோலைப் பயன்படுத்தி பிறந்த குழந்தையின் இதயத் துடிப்பு, அனிச்சை செயல், தசையின் தன்மை, சுவாசிப்பு, உடல் நிறம் ஆகிய ஐந்து செயல்பாடுகளைக் கணித்து ஒவ்வொன்றுக்கும் 0, 1, 2 என்ற வரிசையில் மதிப்பெண் வழங்குவார். இவற்றின் கூட்டுத்தொகை 0 முதல் 3-ஆக இருந்தால், குழந்தைக்கு உடனடியாக சுவாசமூட்டும் சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.

குழந்தை பிறந்த 60 நொடியில் ஒரு முறையும், ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் இந்த ‘அப்கார்’ அளவுகோலின்படி கணக்கு எடுக்கப்படும். இது குழந்தையின் பிறப்பு அறிக்கையிலும் பதிவு செய்யப்படும். இந்த அப்கார் அளவுகோலை உருவாக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சியாளருமான வர்ஜினியா அப்கார் (1909-1974). இவர் பச்சிளம் குழந்தைகளின் சிகிச்சையில் பல புதிய உத்திகளை அறிமுகப்படுத்தியவர்.

சிறுவயதிலேயே மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டவர் வர்ஜினியா. 1933-ம் ஆண்டில் மருத்துவ பட்டப்படிப்பில் கல்லூரியில் நான்காவது இடத்தை பெற்றவர். 1937-ம் ஆண்டு அறுவை சிகிச்சை படிப்பை முடித்தார்.

அமெரிக்காவின் முதல் மயக்க மருந்து வல்லுநர்களுக்கான பட்டப்படிப்பு கல்வி விஸ்கான்சின் மாகாணத்தின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. 1937-ம் ஆண்டில் அங்கே ஆறு மாதம் பட்டயப் படிப்பைப் படித்தார் வர்ஜினியா. 1938-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட மயக்க மருந்து துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அப்போது பிறந்து 24 மணி நேரத்துக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதை கவனித்த அப்கார், குழந்தைகளின் இறப்பிற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஆராய்ச்சி செய்தார். ஆரோக்கியமான குழந்தைகளுக்கும், பிரச்சினைக்குள்ளான குழந்தைகளுக்கும் இடையே இருந்த வேறுபாடுகளையும் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அப்கார் அளவுகோலைக் கண்டுபிடித்தார். அதுதான் ‘அப்கார் கணக்கு’ என்று அழைக்கப்பட்டது.

1960-களில் அமெரிக்காவின் பெரும்பாலான மகப்பேறு மருத்துவமனைகள் அப்கார் அளவுகோலைத் தொடர்ந்து பயன்படுத்தின. இதனால் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்தது.

அப்கார், கருவுற்ற தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது  குறித்து மருத்துவ உலகிலும், மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த  நிறைய புத்தகங்கள் எழுதினார், சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

இசை, தோட்டக்கலை, கோல்ப் விளையாட்டு, தபால் தலை சேகரித்தல் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் இறுதி வரை மருத்துவப் பணிக்காகவே வாழ்நாளைக் கழித்தார். 

Next Story