நம்பிக்கை கால்கள்


நம்பிக்கை கால்கள்
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM GMT (Updated: 23 April 2022 12:22 PM GMT)

படிப்பு முடிந்ததும் சிவகங்கைக்கு வந்து, தோழியின் உதவியுடன் ஒரு வேலை தேடிக் கொண்டு, ஒரே ஒரு அறை உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கினேன். பிறகு, ஒருவரின் உதவியால் கடந்த 2016-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதும் வேலையில் சேர்ந்தேன்.

‘வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காமல் முயற்சி செய்தால், எத்தகைய துன்பத்தில் இருந்தும் மீண்டு வரலாம்’ என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சுபஜா. தான் சந்தித்த சோதனை ஒவ்வொன்றையும், சாதனையாக மாற்றி வெற்றிப் புன்னகையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரது பேட்டி...

“எனது சொந்த ஊர், நாகர்கோவில். என்னுடன் பிறந்தது 6 பேர். நான்தான் கடைக்குட்டி. எனக்கு ஒரு வயது இருக்கும்போதே, தந்தை இறந்துவிட்டார். அதன்பின் தாயாரும் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி விட்டார். அக்கா, அண்ணன்கள் வேலைக்குச் சென்றுவிட, பள்ளி மாணவியான நான், அம்மாவைக் கவனித்துக்கொண்டேன். 

பல நாட்கள், அவித்த மரவள்ளிக் கிழங்கையும், கடுங்காபியையும் குடித்தே பசியாறினோம். ஒருநாள் அம்மா, திடீரென என் கண் முன்னே இறந்து போனார்.

சில வருடங்களுக்கு பின்னர், பன்னிரண்டாம் வகுப்பின் அரையாண்டு விடுமுறையின்போது, சென்னையில் இருக்கும் அக்காவின் வீட்டிற்குச் செல்வதற்காக, நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்குச் சென்றேன். வேகமாக ஓடி ரெயிலில் ஏறும்பொழுது, ஒரு கால் ரெயில் சக்கரத்தில் சிக்கித் துண்டிக்கப்பட்டது. மற்றொரு காலும் சிதைந்தது.

கவனித்துக் கொள்ள ஆளில்லாத நிலையில் மருத்துவமனையில் 6 மாதங்கள் இருந்தேன். கடைசியாக என் அண்ணன் ஒருவர், எனக்கு வேண்டியவற்றை செய்தார். எனினும் காயம் பட்ட காலில் இருந்து ரத்தம் எப்பொழுதும் வடிந்தது. நண்பர்களின் உதவியோடு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி, அதில் 880 மதிப்பெண்கள் பெற்றேன். 

அந்தத் தருணத்தில்தான், ஒரு ஜெர்மானிய பெண் என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். ‘சிதைந்த நிலையில் இருந்த காலை எடுப்பதே நலம்’ என்று மருத்துவர் மற்றொரு காலையும் நீக்கினார்.
ஜெர்மானிய பெண், தன் சொந்தச் செலவில் எனக்கு செயற்கை மரக்கால்களைப் பொருத்திவிட்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் படிப்பில் சேர்த்துவிட்டார். 

படிப்பு முடிந்ததும் சிவகங்கைக்கு வந்து, தோழியின் உதவியுடன் ஒரு வேலை தேடிக் கொண்டு, ஒரே ஒரு அறை உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கினேன். பிறகு, ஒருவரின் உதவியால் கடந்த 2016-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில், மனு எழுதும் வேலையில் சேர்ந்தேன்.

முகநூலில் பார்த்த காணொலி மூலம், மாற்றுத் திறனாளிகளும் விளையாட்டில் சாதிக்கலாம் எனத் தெரிந்து கொண்டேன். முயற்சியாலும், பயிற்சியாலும் நீச்சல், வட்டு எறிதல், ஜாவலின் த்ரோ, கூடைப் பந்து, ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை வரிசையாக வென்றேன். 

ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னை சென்று பயிற்சி எடுத்துக் கொண்டு, வாரத் தொடக்கத்தில் ஊர் வந்து சேர்ந்து விடுவேன். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று உலகம் போற்றும் ஒரு பிளேட் ரன்னர் (Blade Runner) ஆக வேண்டும் என்பதே என் கனவு. மரக்கால்கள் தினசரிப் பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்தது. 

விளையாட்டுப் போட்டிகளில் இரும்புக் கால்களையே பயன்படுத்துவார்கள். எனவே, அதற்கான சேமிப்பில் ஈடுபட்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் இத்தனை இழப்புகளைச் சந்தித்த பின்னரும், நம் வாழ்க்கைத் தரத்தை நாம்தான் முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கை மட்டும் தீராமல் என்னிடம் அப்படியே இருக்கிறது” - கண்கள் கலங்க புன்னகைக்கிறார் சுபஜா. 

Next Story