பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘ஐபன்’ ஓவியம்


பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘ஐபன்’ ஓவியம்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:30 AM GMT (Updated: 29 Jan 2022 12:00 PM GMT)

‘லெபனா’ என்ற சமஸ்கிருத வார்த்தைதான், ஆரம்பத்தில் இந்த ஓவியத்தின் பெயராக இருந்தது. இதற்குப் ‘பூச்சு செய்தல்’ என்பது பொருள். இதிலிருந்து மருவிய வார்த்தையே ‘ஐபன்’ என்பது.

றவைத்த பச்சரிசியை தண்ணீருடன் கலந்து அரைத்து, மாவாக்கி அதைக்கொண்டு வரையப்படும் ‘இழைக்கோலம்’ தமிழகத்தின் பாரம்பரியம் ஆகும். இதைப்போலவே சிவப்பு நிறப் பின்னணியில், வெள்ளை நிறத்தில் வரையப்படும் ‘ஐபன்’ ஓவியக் கலையை உத்தரகாண்ட் மாநில பெண்கள் பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.

உத்தரகாண்ட் இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலைத் தொடரின் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு வசிக்கும் ‘குமாயோன்’ இனப் பெண்கள், ‘ஐபன்’ ஓவியத்தை வரைந்து வருகிறார்கள். இவர்களுக்கு அழகிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதுதான் பாரம்பரியமான தொழிலாக இருந்து வருகிறது.  இம்மாநிலத்தில் கைவினைப் பொருட்கள் தனி அழகுடன் மிளிரும். இதில்,  முக்கிய இடம் பிடிப்பது ‘ஐபன்’ ஓவியக் கலையாகும்.

‘லெபனா’ என்ற சமஸ்கிருத வார்த்தைதான், ஆரம்பத்தில் இந்த ஓவியத்தின் பெயராக இருந்தது. இதற்குப் ‘பூச்சு செய்தல்’ என்பது பொருள். இதிலிருந்து மருவிய வார்த்தையே ‘ஐபன்’ என்பது.

குழந்தை பிறப்பு, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், இறப்பு உட்பட அனைத்து சடங்குகள், கோவில் விழாக்கள் மற்றும் பண்டிகைகளின்போது ஐபன் ஓவியங்கள் வரையப்படுகின்றன. கிராமப்புற வீடுகளில் சிவப்பு நிறத்தில், செம்மண் கொண்டு மெழுகப்படும். இதற்கு ‘கெரு’ என்று பெயர். முழுவதும் சிவப்பு நிறத்தில் மெழுகப்பட்ட இடத்தில், வேக வைத்த அரிசியைப் பசை போன்று அரைத்து, பெண்கள் தங்கள் கைகளால் பல வடிவங்களைத் தங்கள் கற்பனை திறனுக்கேற்ப வரைவார்கள். இந்த அரிசிப் பசைக்கு ‘பிஸ்வர்’ என்று பெயர்.

இதை வரைய, பெண்கள் தங்கள் வலது கையில் கடைசி மூன்று விரல்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். மையத்தில் வைக்கப்படும் ஒரு புள்ளியில் தொடங்கி, கடைசி புள்ளியிலேயே முடிவு பெறும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருக்கும். மையப் புள்ளி பிரபஞ்ச மையத்தை குறிக்கும். இதில், கடவுள் பாதம், ஸ்வஸ்திக், கோலம், கோடுகள், கணிதக் குறியீடுகள் என பெண்களின்  கற்பனைக்கேற்ப பல வடிவங்கள் இடம் பெற்றிருக்கும்.

பல நாட்கள் ஆனாலும் அழியாமல் பளிச்சென வீட்டை அலங்கரிக்கும். தரைகளில் மட்டுமின்றி, வீட்டின் சுவர்களில் கூட ஐபனில் வரையப்படும் நேரியல் கோடுகள், வரையப்படும் விதத்தைப் பொறுத்து சடங்கா அல்லது திருவிழாவா என எளிதில் அடையாளம் காண முடியும்.

வீட்டு வாசற்படிகளில், இந்தக் கலையின் ஒரு பகுதியான ‘வசுதாரா’ என்ற நேர்கோடுகள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. இதில், பக்தியை வெளிப்படுத்தும் வகையில் வரையப்படும் சரஸ்வதி சவுக்கி, ஹோமம் போன்றவற்றுக்கு வரையப்படும் ‘சாமுண்ட ஹாஸ்ட் சவுக்கி’ என்ற இருமுறைகள் மிகவும் பிரபலம்.

தரையில் வரையப்பட்டு வந்த இந்த ஓவியம் தற்போது துணி, வீட்டு அலங்காரப் பொருட்கள், பேனா வைக்கும் ஸ்டாண்ட் என அனைத்திலும் பிரதிபலித்து வருகிறது. இதன் மூலம் பெண்கள் வருமானம் ஈட்டி வருகிறார்கள். 

Next Story