ஓலையில் கைவண்ணம்


ஓலையில் கைவண்ணம்
x
தினத்தந்தி 7 Feb 2022 5:30 AM GMT (Updated: 5 Feb 2022 8:46 AM GMT)

‘ஜாநூர் ஆர்ட்’ என்பது தென்னங்குருத்தையும், வாழைத்தண்டையும் வைத்து அலங்காரப் பொருட்கள் செய்யும் கலை. திருமண விழாக்களில் வாசலில் கோலம் போடும் இடங்களிலும், மேடைகளிலும் இதை அலங்காரத்துக்காக வைப்பார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ராணி சுப்பிரமணியன். இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட இவர், தென்னை ஓலையைப் பயன்படுத்திச் செய்யும் ‘ஜாநூர் ஆர்ட்’, வாழை இலைகளைப் பயன்படுத்திச் செய்யும் ‘தாய் ஆர்ட்’ போன்ற கலைகளில் கைத்தேர்ந்தவர். மேலும் பனை ஓலைகளிலும், கைவினைப் பொருட்கள் செய்கிறார். தான் கற்றுக்கொண்டவற்றை பிறருக்கு கற்பித்தும் வருகிறார். அவர் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்..

‘‘எனக்கு சிறுவயதில் இருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் இருந்தது. திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு தையல் வகுப்பிற்குச் சென்றேன். பொம்மைகள் செய்வதற்கும் கற்றுக் கொண்டேன்.

ஆரம்ப காலத்தில் குரோசா ஒயர், உல்லன் நூல், ஸ்வஸ்திக் ஒயர் இவற்றைக் கொண்டு கைவினைப் பொருட்களைத் தயாரித்தேன்.

தஞ்சாவூர் ஓவியம், வாட்டர் கலர் ஓவியம், முரல் ஓவியம், கிளாஸ் பெயிண்டிங், கிளாத் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங் என பல முறைகளில் ஓவியங்கள் வரைவேன்.

இயற்கையின் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக ‘ஜாநூர் ஆர்ட்’டை ஒரு விழாவில் பார்த்து கற்றுக் கொண்டேன்.

‘ஜாநூர் ஆர்ட்’ என்பது தென்னங்குருத்தையும், வாழைத்தண்டையும் வைத்து அலங்காரப் பொருட்கள் செய்யும் கலை. திருமண விழாக்களில் வாசலில் கோலம் போடும் இடங்களிலும், மேடைகளிலும் இதை அலங்காரத்துக்காக வைப்பார்கள்.

ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பி, வாழைத்தண்டை பட்டையை நீக்காமல் நிற்க வைப்பார்கள். அதன் மேல் தென்னங்குருத்தின் ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்து, வளைத்து, மடித்து, ஒட்ட வைத்து செய்வார்கள்.



இயற்கைப் பொருட்களான வாழை இலையையும், தென்னங்குருத்தையும் பயன்படுத்திச் செய்வதன் காரணமாக இதில் புதுமையும், வித்தியாசமும் இருக்கும்.

அதே போல் ‘தாய் ஆர்ட்ஸ்’ என்பது வாழை இலைகளையும், வாழைத்தண்டையும் பயன்படுத்திச் செய்யக்கூடிய கைவேலை. இதில் தட்டு, கடவுள் உருவங்கள் வைக்கும் மேடை போன்றவற்றைச் செய்ய முடியும்.

இவை மட்டுமில்லாமல் பனை ஓலையைக் கொண்டும் பல கைவினைப் பொருட்கள் தயாரிக்கிறேன். இதில் பல வண்ணங்களைச் சேர்த்து வித்தியாசமாகச் செய்யலாம். 

மேலும், பட்டுப்பூச்சிக் கூட்டைக்கொண்டு மாலைகள் தயாரித்தேன். அதற்கு அரசின் சார்பாக 2021-ம் ஆண்டு  ‘பூம்புகார் விருது’ கிடைத்தது. நான் கற்றுக் கொண்ட அனைத்து கைவினைக் கலைகளுக்கும் மகுடமாக இந்த விருதை நினைக்கிறேன். மேலும், ஆசியா புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழ் பெற்றிருக்கிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுக்குக் கைவினைப் பொருட்களுக்கான பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன். 

நாம் அடுப்பங்கரையில் உடைக்கும் தேங்காய் மூடியை வைத்துக்கூட அழகுப் பொருள் செய்யலாம். அதைக் கடந்து போகும்போது நமக்குக் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கலைகள் மனநிறைவைக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் வருமானத்தையும், தன்னம்பிக்கையும், தைரியத்தையும் கொடுக்கும்’’ என்றார் ராணி சுப்பிரமணியன். 

Next Story