தரை மெத்தை


தரை மெத்தை
x
தினத்தந்தி 7 Feb 2022 5:30 AM GMT (Updated: 5 Feb 2022 8:55 AM GMT)

பயன்படுத்திய பழைய துணிகளைக்கொண்டு, உபயோகமான தரை மெத்தையை எளிய முறையில் உருவாக்க முடியும்.

நாம் வேண்டாமென்று ஒதுக்கும் பொருட்கள், பல சமயங்களில் வேறொரு வடிவத்தில் உபயோகமான பொருளாக நமக்குப் பயன்படுவதுண்டு. அந்த வகையில், பயன்படுத்திய பழைய துணிகளைக்கொண்டு, உபயோகமான தரை மெத்தையை எளிய முறையில் உருவாக்க முடியும். அதை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்:
பழைய துணி அல்லது பஞ்சு, ஊசி, நூல்,  அளவு கோல் , கத்தரிக்கோல்,  ஜிப், குண்டூசிகள்,  பேனா

செய்முறை:
1. மேற்புற மற்றும் கீழ்ப்புற துணி
படத்தில் காட்டியவாறு 17x17 அங்குலம் நீள அகலத்தில், சதுர வடிவில் துணியைக் கத்தரித்து,  நான்கு சம பாகங்களாக குறித்துக்கொள்ளவும். பின்னர் பேனாவின் நடுப்புறத்தில் நூலைக் கட்டி அதை நான்கு சதுரங்களும் சந்திக்கும் நடு மையத்தில், நூலின் முனையைப் பிடித்துக்கொண்டு பேனாவால் சுற்றி வட்டமாக வரைந்து கொள்ளவும். பின்பு வட்டப் பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளைக் கத்தரித்து நீக்கவும். இதே போல மற்றொரு வட்டப் பகுதியையும் கத்தரித்துக்கொள்ளவும்.

2. பைப்பிங்
படத்தில் காட்டியவாறு ஒரு பைப்பிங் துணியை வட்டமாக கத்தரிக்கப்பட்ட இரண்டு துணிகளின் ஓரத்திலும் குண்டூசிகளைக் கொண்டு பொருத்தவும். பின்பு ஊசி, நூலால் தைத்துக்கொள்ளவும்.



3. பக்கவாட்டு துணி
17x53.5 அங்குலம் நீள அகல அளவில் துணியைக் கத்தரித்துக்கொள்ளவும். கத்தரிக்கப்பட்ட துணியின் ஒரு முனையை ஏற்கனவே தைத்து வைக்கப்பட்ட வட்டமான துணியின் ஓரத்தைச் சுற்றிலும் உட்புறமாக படத்தில் காட்டியவாறு தைத்துக்கொள்ளவும்.

4. ஜிப் இணைத்தல்
தைக்கப்படாத மற்றொரு வட்டமான துணியின் மையப்பகுதியில், ஜிப் பொருத்துவதற்குத் தேவையான அளவு கத்தரித்துக்கொள்ளவும். ஜிப்பின் அளவுக்கேற்ப சிறிது துணியை கத்தரித்து, ஜிப்பின் முன்புறத்தில் இரண்டு ஓரங்களிலும் குண்டூசியால் பொருத்திப் பின்பு தைக்கவும். தைக்கப்பட்ட ஜிப்பை வட்டமான துணியின் நடுவில் வைத்துப் பொருத்தி தைத்துக்கொள்ளவும்.

5. மெத்தை
ஜிப் பொருத்தி தைக்கப்பட்ட வட்டமான துணியை, ஏற்கனவே தைக்கப்பட்ட பக்கவாட்டு துணியுடன் சேர்த்து உட்புறமாக தைத்துக்கொள்ளவும். பின்னர் துணியை வெளிப்புறமாக திருப்பி, ஜிப்பின் வாய்ப்பகுதியில் பழைய துணிகள் அல்லது பஞ்சு முதலியவற்றால் நிரப்பிப் பின்னர் ஜிப்பை மூடவும்.

இப்பொழுது அழகான சுலபமான தரை மெத்தை தயார். 


Next Story