உடல் ஓவியத்தில் உணர்வுகளை பிரதிபலிக்கும் அஞ்சனா


உடல் ஓவியத்தில் உணர்வுகளை பிரதிபலிக்கும் அஞ்சனா
x
தினத்தந்தி 14 Feb 2022 5:30 AM GMT (Updated: 12 Feb 2022 7:21 AM GMT)

வெளிநாடுகளில் உடலில் ஓவியம் வரைவது சகஜமான விஷயம். அந்தக் கலையை ‘கிரியேடிவ் பெயிண்டிங்', ‘கிரியேடிவ் மேக்கப்', ‘பேன்டசி பெயிண்டிங்', ‘பேன்டசி மேக்கப்' என்று பலவிதமாக சொல்வார்கள். ஒட்டுமொத்தமாக ‘பாடி ஆர்ட்' எனச் சொல்லலாம். அதாவது உடல் ஓவியம்!

‘டாட்டூஸ்' வரைந்துகொண்டு உலா வரும் இளம் பெண்களிடையே, வித்தியாசமான உடல் ஓவியம் மூலம் கவனம் ஈர்க்கிறார் அஞ்சனா. எதற்கான முயற்சி இது? அவரே சொல்கிறார்...

“தமிழ்நாட்டில் பசுமை நிறைந்த தேனி மாவட்டத்தில் பிறந்தேன். கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். வேலை தேடிக்கொண்டிருந்தபோது, எனது தோழி நான்ஸி, ‘உன்னுடைய முகபாவம், சிரிப்பு எல்லாம் நடிகையைப் போல இருக்கிறது’ என்று கூறி எனக்குள்ளே நடிப்பு ஆர்வத்தை தூண்டினார். அதுமட்டுமில்லாமல் ‘வைதேகி' எனும் குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தப் படத்துக்கு ‘விருது' கிடைத்தது.

அதைத் தொடர்ந்து ‘அகம்' எனும் குறும்படத்தில் நடித்தேன். அதில் நான் நடித்த ‘நிர்பயா' எனும் கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. பின்பு தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என தன்னைப் பற்றி அறிமுகம் கொடுத்த அஞ்சனா, தொடர்ந்து தன் உடலில் தீட்டிய ஓவியம் பற்றிச் சொன்னார்.

“தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்றாலும், கலைத்துறையில் நிலைத்திருக்க வேண்டும். நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் இருக்கிறது. இதற்காக ஏதாவது செய்ய வேண்டும். மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது நல்லதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் அடிப்படையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு மார்ச் மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கான்செப்ட் போட்டோ ஷூட்' செய்ய நினைத்தோம். அதற்காக, ‘பாடி ஆர்ட்' எனச் சொல்லக்கூடிய உடல் ஓவியத்துக்கு மாடலாக முடிவெடுத்தேன்.

வெளிநாடுகளில் உடலில் ஓவியம் வரைவது சகஜமான விஷயம். அந்தக் கலையை ‘கிரியேடிவ் பெயிண்டிங்', ‘கிரியேடிவ் மேக்கப்', ‘பேன்டசி பெயிண்டிங்', ‘பேன்டசி மேக்கப்' என்று பலவிதமாக சொல்வார்கள். ஒட்டுமொத்தமாக ‘பாடி ஆர்ட்' எனச் சொல்லலாம். அதாவது உடல் ஓவியம்!

அத்தகைய கலைகளில் ஒன்றுதான் எனது உடல் மூலமாக வெளிப்பட்டது. எந்தவொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் முக்கியமானது தாய்மைப் பருவம். அந்தப் பருவத்தை உடலில் ஓவியமாக வரையலாம் என முடிவெடுத்தோம்.

‘ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்', ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என பல சாதனை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த ‘மேக்கப் கலைஞர்' இலங்கேஸ்வரிதான் இந்த யோசனையைச் சொன்னார். அவர்  என் உடலில் வண்ணம் தீட்டி, ஓவியம் வரைவதற்கு நான்கு மணி நேரம் ஆனது. இது மாதிரி நிறைய மெனக்கெடல்கள்” என்று உற்சாகமாக விளக்கம் கொடுத்த அஞ்சனா, சமீபத்தில் காய்கறிகளால் ஆன உடையணிந்து பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றார். அது பற்றிக் கேட்டோம்...

“அன்றாட உணவில் காய்கறிகளின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, காய்கறிகளை உடையாக அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைத்தபோது அதை பயன்படுத்திக்கொண்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது'' என்றார். 

Next Story