‘கலைப் பொருட்கள்’ தயாரிக்கும் கட்டிடக்கலை நிபுணர்


‘கலைப் பொருட்கள்’ தயாரிக்கும் கட்டிடக்கலை நிபுணர்
x
தினத்தந்தி 14 Feb 2022 5:30 AM GMT (Updated: 12 Feb 2022 7:25 AM GMT)

பழமை, கலாசாரம், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களுடன் இணைத்து, மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என நினைத்து இதைத் தொழிலாக செய்ய ஆரம்பித்தேன்.

ரூரைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் பிரத்யூஷா, நுண்கலையின் மீது ஆர்வம் கொண்டவர். அதில் பழங்காலத் தமிழ் கலாசாரத்தைப் புகுத்தி, கலைநயம் மிக்க பொருட்களைத் தயாரித்து வருகிறார். 

அவரது பேட்டி…

நுண்கலைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தது எப்படி?
கட்டிடக்கலை படிப்பின் ஒரு பகுதியாக, பெங்களூருவில் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நண்பர்கள் அனைவரும் பரிசுகளைப் பரிமாறி, தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டார்கள். அவை எல்லாம் கடைகளில் இருந்து வாங்கியவை. அதைப்பார்த்ததும் ‘பரிசுப் பொருட்களை நாமே தயார் செய்து கொடுத்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்குமே’ என்று எனக்கு தோன்றியது. எனவே அடுத்து வந்த ஆங்கில புது வருடப் பிறப்பிற்கு, நானே என் கைப்பட ஒரு காலண்டர் செய்து, தோழிக்குப் பரிசளித்தேன். அது அனைவரையும் கவர்ந்தது. அந்த நொடியில்தான், ‘இதை ஒரு தொழிலாக மாற்றலாம்’ என்ற எண்ணம் தோன்றியது. பழமை, கலாசாரம், தமிழ்மொழி ஆகியவற்றின் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களுடன் இணைத்து, மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என நினைத்து இதைத் தொழிலாக செய்ய ஆரம்பித்தேன்.

நீங்கள் தயாரிக்கும் கலைப் பொருட்களின் சிறப்பம்சங்கள் என்ன?
தொடக்கத்தில் கம்பிக்கோலத்தை மையமாக வைத்து காலண்டர்கள், புக்மார்க்குகள் தயாரித்தேன். பின்பு, 2020-ம் ஆண்டு, ‘பழங்காலக் கோவில்களும், சுங்குடிகளும்’ என்ற தலைப்பில், காலண்டர்கள் தயார் செய்தேன். அதில் ‘சிட்டு’ என்ற பறவை கதாபாத்திரத்தையும் அறிமுகம் செய்தேன். எனது வாடிக்கையாளர்களிடம் நான் பேச நினைப்பதை எல்லாம், அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தேன். நான் தயாரிக்கும் அனைத்து மரப்பொருட்களுமே மறுபயன்பாட்டிற்குத் தகுதியானவை. காலண்டர் முடிந்தாலும், அதில் நம் புகைப்படங்களை பொருத்தி வைத்து, மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம். மரப்பொருட்களை தயார் செய்து முடித்தபின்பு, அதன் மேல் வார்னிஷ் பூச்சுக்கு பதில் தேன் மெழுகைப் பூசித் தயாரித்தேன். இது முற்றிலும் இயற்கையானது மற்றும் சிறுகுழந்தைகள் அதை வாயில் வைத்து விளையாடினாலும் பாதிப்பு ஏற்படுத்தாது.

‘பொன்னியின் செல்வன்’ கதையை மையப்படுத்தி தயாரித்த பொருட்கள் பற்றி கூறுங்கள்?
என் அம்மா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சமயம், நான் மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தேன். மனதை திசைத் திருப்புவதற்காக ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை வாசிக்கத் தொடங்கினேன். அதிலுள்ள கதாபாத்திரங்களும், அதன் மொழியாடலும் என்னை ஈர்த்தது. எனவே அந்தப் புதினத்தில் இடம்பெற்ற இடங்களையும், கதாபாத்திரங்களையும் ஒவ்வொரு மாதத்திற்கும் என வடிவமைத்து, ‘பொன்னியின் செல்வன்’ புகழ்பாடும் டேபிள் காலண்டர், சுவர் காலண்டர், டேபிள் ஆர்கனைசர் என மூன்று பொருட்களை உருவாக்கினேன். அதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

கட்டிடக்கலை தொழிலுக்கும், நுண்கலைத் தொழிலுக்கும் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?
எந்த வேலையைக் குறுகிய காலக்கட்டத்திற்குள் முடித்துத் தர வேண்டுமோ அதை முதலில் செய்வேன். ஒவ்வொரு வேலைக்கும், நான் கொடுக்கப்போகும் முக்கியத்துவத்தை, என் வாடிக்கையாளர்களிடம் தெளிவாகப் புரியவைத்து விடுவேன். அவர்களும் புரிந்து கொள்வார்கள். அதனால் எளிதில் சமாளிக்க முடிகிறது. 

Next Story