வளையல் அணியும் பாரம்பரியம்


வளையல் அணியும் பாரம்பரியம்
x
தினத்தந்தி 7 Feb 2022 5:30 AM GMT (Updated: 5 Feb 2022 9:08 AM GMT)

ஒவ்வொரு கையிலும் அணியும் வளையல்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட வகையான ஆற்றல் உருவாகும். மேலும், கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீக தன்மை மற்றும் சைதன்யம் போன்ற தன்மைகள் நிறைந்து இருப்பதாகவும், அவை நமக்கு நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்குவதாகவும் நம்பிக்கை உள்ளது.

ந்தியாவில் பெண்கள் அன்றாடம் அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல். பிறந்த குழந்தை முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் வளையல் அணிகிறார்கள். இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில், பழமையான மற்றும் சிறப்புமிக்க அணிகலன் வளையல். தங்கம், வெள்ளி, கண்ணாடி, தந்தம், மரக்கட்டை, மெழுகு என பல பொருட்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட வளையல், தற்போது பட்டு நூலில் கூட செய்யப்படுகிறது. 

இந்திய கலாசாரத்தில் ஆண், பெண் இருவரும் வளையல் அணியும் பழக்கம் உள்ளது. குறிப்பாக திருமணமான பெண்களை அடையாளப்படுத்தும் விதமாக வளையல் அணிவிக்கப்பட்டு வந்தது. மேலும், ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனியே அடையாளப்படுத்தும் விதமாகவும் வகைவகையான வளையல்கள் அணிவிக்கப்பட்டன. சகோதரர், தந்தை அல்லது கணவர் மட்டுமே அப்பெண்ணின் கையைப் பிடிக்கும் உரிமை இருப்பதை உணர்த்தும் விதமாக இப்பழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. ‘கடா’ அல்லது ‘கடையம்’ என அழைக்கப்படும் ஒரே ஒரு வளையலை ஆண்கள் அணிவார்கள்.

வளையலுக்கென்று தனி வரலாறே உள்ளது. ஆரிய நாகரிகம் முதல் ரோமானியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள் போன்றோர் வளையலை பாதுகாப்பு அணிகலனாக பயன்படுத்தி வந்தார்கள் என்ற பதிவு உள்ளது. இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கடல் சிப்பி, தாமிரம், தங்கம், அகட் மற்றும் சால்சிதோனி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட வளையல்கள் கிடைத்துள்ளன. வளையல் அணிவது உடல் ஆரோக்கியம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது.

ஒவ்வொரு கையிலும் அணியும் வளையல்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட வகையான ஆற்றல் உருவாகும். மேலும், கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீக தன்மை மற்றும் சைதன்யம் போன்ற தன்மைகள் நிறைந்து இருப்பதாகவும், அவை நமக்கு நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்குவதாகவும் நம்பிக்கை உள்ளது.

மேலும், வளையல் அணிவது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும், வளையல் ஓசை உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளித்து மன அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வளையல் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தி, எதிர்மறை உணர்வுகளை புறம் தள்ளும். வளையல் அணிவதில் மூன்று, ஆறு, எட்டு அல்லது பன்னிரண்டு எண்ணிக்கை பின்பற்றப்படுகிறது. திருமணம் ஆகாத பெண்கள் மூன்று, திருமணமான பெண்கள் எட்டு, கருவுற்ற பெண்கள் பன்னிரண்டு என்ற எண்ணிக்கையில் வளையல் அணிவது பழக்கத்தில் உள்ளது. அதேபோல், வளையலின் வண்ணங்களும், அவற்றின் வடிவமும் தனி அர்த்தத்தை உணர்த்துவதாகவும் கருதப்படுகிறது. 

Next Story