“ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு சவாலானவை” - மீதா


“ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு சவாலானவை” - மீதா
x
தினத்தந்தி 14 March 2022 5:30 AM GMT (Updated: 12 March 2022 10:54 AM GMT)

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குழந்தைகளால் ஆன்லைன் வகுப்பில் உட்கார முடியாது. ஆறு வயது வரை குழந்தைகள் நேரடியாக ஆசிரியர்கள் உடன் தொடர்பில் இருப்பதுதான் அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்.

“கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது குழந்தைகளுக்கு சவாலான விஷயம்” என்கிறார் மீதா. மும்பையைச் சேர்ந்த இவர் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பாடம் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு, தனி ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்று கொடுக்கும் பணியைச் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

“குழந்தைகளுக்கு தனியாக பாடம் சொல்லி தரும் பணியைச் செய்கிறோம். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் பதிவிட்டு வருகிறோம்.

குழந்தைகளுக்கு தனியாக ஆன்லைன் மூலமாக பாடம் எடுப்பது மட்டுமில்லாமல், அவர்களின் வீட்டுக்கே சென்று கற்றுக்கொடுக்கிறோம். ஒரு ஆசிரியர் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்கு பாடம் எடுப்பார். இதை முழுமையாக கொரோனா காலத்தில்தான் செயல்படுத்தத் தொடங்கினோம். பாடம் மட்டுமில்லாமல் அறிவியல், விளையாட்டு என அனைத்தையுமே சொல்லிக் கொடுக்கிறோம்” என்றவர் கொரோனா காலத்தை இதற்கு தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கும் பதில் சொல்கிறார்.

“கொரோனா காலத்தில்தான் பரவலாக குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதில் குழந்தைகளால் நீண்ட நேரம் உட்கார்ந்து கவனம் செலுத்துவது முடியாது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களால் ஆன்லைன் வகுப்பில் உட்கார முடியாது. ஆறு வயது வரை குழந்தைகள் நேரடியாக ஆசிரியர்கள் உடன் தொடர்பில் இருப்பதுதான் அவர்களின் கற்றல் திறனை  அதிகரிக்கும்.

ஒரு முறை ஆன்லைனில் நான்கு மற்றும் ஐந்து வயதிருக்கும் இரண்டு குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தேன். அதில் ஒரு குழந்தை அந்த அறை முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு குழந்தைக்கு பொம்மைகள் கொடுத்து அதன் அம்மா உட்கார வைத்திருந்தார். இது போல இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் பயனில்லாதது என்பதால் வீட்டுக்கு நேரடியாக ஆசிரியர்கள் சென்று பாடம் எடுக்கும் முறையை கொண்டு வந்தோம்.  

கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதும் எங்களது திட்டத்தை இன்னும் விரிவாக கொண்டு செல்ல எண்ணியிருக்கிறோம்” என்கிறார் மகிழ்ச்சியாக. 

Next Story