வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் கலைவாணி


வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் கலைவாணி
x
தினத்தந்தி 21 March 2022 5:30 AM GMT (Updated: 19 March 2022 10:21 AM GMT)

தமிழ் வழியில் படித்தாலும், ஆங்கில வழியில் படித்தாலும், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது சிரமமாகவே இருக்கிறது. இதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால், தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் கலைவாணி, பொறியியல் பட்டதாரி. தனியார் நிறுவனப் பணியில் இருந்து விலகி, தனது திறமைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன், கணினி இயக்கம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறார். தனது சேவையினால் பல மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார். அவரது பேட்டி…

உங்களைப் பற்றி?
பொறியியல் படிப்பு முடித்த பின்னர் மத்தியப் பிரதேசத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணிபுரிந்தபோதுதான் ஆங்கில மொழியின் அவசியத்தை உணர்ந்துகொண்டேன். அந்த அனுபவத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவ நினைத்தேன். எனவே அவர்களுக்கு ஆங்கிலத்தைச் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.

உங்கள் குடும்பத்தைப் பற்றி?
நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பாவின் மறைவிற்குப் பிறகு அம்மாதான்  குடும்பத்தைக் கவனித்து வருகிறார். வீட்டில் வறுமை இருந்தாலும் மனநிறைவிற்காகவே சேவைகளை செய்யத் தொடங்கினேன். அதைப் பார்த்துப் பலரும் கேலி பேசினார்கள். ஆனால், வீட்டில் யாரும் என்னைத் தடுக்கவில்லை.

இலவசமாக ஆங்கிலப் பயிற்சி அளிப்பதற்கான காரணம்?
இன்றைய கல்வி முறையில் ஆங்கிலம் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இது மாணவர்களின் தொடர்பு கொள்ளும் திறனை அதிகரிப்பதற்கு அடிப்படைத் தேவையாக உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே தான் கிராமப்புற மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். ஆங்கிலம் கற்பிப்பதை சேவையாகத் தொடங்கி, தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.

மாணவர்களுக்கு எவ்விதம் கற்றுக் கொடுக்கிறீர்கள்?
தமிழ் வழியில் படித்தாலும், ஆங்கில வழியில் படித்தாலும், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது சிரமமாகவே இருக்கிறது. இதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால், தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

ஆங்கிலம் ‘மொழி’ என்பதை மறந்து, அதை ‘அறிவு’ எனும் அர்த்தத்தில் பலர் ‘இங்கிலீஷ் நாலேட்ஜ்’ என்று குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு சொல்வது முற்றிலும் தவறானது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்காக அந்தப் பாடத்தைப் படிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியில் புலமை பெற, அந்த மொழியைப் படிக்கக் கூடாது; கற்றுக்கொள்ள வேண்டும்.



அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், மொழியைக் கற்றுக்கொள்ளும் விதமும், பாடத்தை படிக்கும் விதமும் வெவ்வேறானவை. அவரவர் தாய் மொழியை, எந்தத் துணையும் இல்லாமல் தானாகவே கற்றுக்கொள்கிறோம். இவ்வாறு எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்வதில் நான்கு பகுதிகள் உள்ளன. அவை கவனிப்பது (Listening), பேசுவது (Speaking), படிப்பது (Reading), எழுதுவது (Writing).

தாய் மொழியைக் கற்றுக்கொள்ள, முதலில் நாம் ‘கவனிக்கத்’ தொடங்கினோம். நமது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் நம்மைச் சுற்றி பேசுவதைப் புரியாமல் கவனித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புரியத்தொடங்கி ‘பேசத்’ தொடங்கினோம். அவ்வாறு பேசும் போதும், ஆரம்பத்திலேயே சரளமாக பேசாமல் முதலில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்துகள் உள்ள எளிய சொற்களைப் பழகினோம்.

பிறகு எளிய வாக்கியங்களை பேசினோம். அப்படி பேசியபோது நாம் செய்த தவறுகளுக்குத் தண்டனைகள் கிடைக்கவில்லை, யாரும் கேலி செய்யவில்லை. மாறாக நமது தவறுகள் சரி செய்யப்பட்டன. இதற்கெல்லாம் அடுத்துதான் படிக்கவும், எழுதவும் தெரிந்து கொண்டோம்.

ஆனால் ஆங்கிலத்தை பொறுத்தவரை முதலில் படிக்க, எழுதத் தொடங்கி பின்பு ஆரம்பிப்போம். ‘தவறாகப் பேசினால் கேலி செய்வார்கள்’ என நினைத்து ஆங்கிலத்தில் பேசுவதற்கு அச்சப்படுவோம். இதற்கிடையில் ‘ஆங்கிலம் பேசுவதை  கவனித்தல்’ என்பது வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.

இவ்வாறு, மொழியைக் கற்க வேண்டிய முறையில் ஆங்கிலத்தை கற்காததும், ஒரு பாடத்தை படிப்பது போன்று ஆங்கிலத்தைப் படிப்பதும்தான், பலர் ஆங்கிலம் பேச முடியாமல் போவதற்கு அடிப்படைக் காரணங்கள்.

எனவே பேசத் தொடங்குவதற்கு முன்பாக, ஆங்கிலத்தைக் கவனிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆங்கிலத்தை அதிகம் கேட்டிராதவர்கள் வெளிநாட்டு ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. இதன் மூலம் நம்பிக்கை இழந்து விட வாய்ப்பு உண்டு. இருக்கும் வழிகளில் உங்களுக்கு பொருத்தமான, புரியும் வகையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும். தற்போது ஆங்கில மொழியைக் கவனிக்க பல வாய்ப்புகள் உள்ளன. அதையே மாணவர்களுக்கும் எடுத்துக்கூறினேன்.

ஒவ்வொரு வார்த்தையையும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங் கினாலே ஆங்கிலம் எளிதாகி விடும். இவ்வாறு, படிப்படியாகக் கற்றுக் கொண்டால் சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் முடியும். இந்த முறையை மாணவர்களுக்குப் பயன்படுத்தும்போது எளிமையாக உணர்ந்தார்கள்.

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தது பற்றி?
கொரோனா காலகட்டம் மாணவர்களின் கல்வி முறையில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ்வழியில் கற்கும் மாணவர்கள் அதிக சவால்களை சந்தித்தனர். எனவே அவர்களைக் கல்வியின் பக்கம் முழுமனதோடு திசை திருப்புவதற்கு ஆன்லைன் வகுப்புகள்  உதவின.

அவர்களுக்கு முதல் பதினைந்து நாட்களில் வார்த்தையைக் கையாளும் விதங்கள் குறித்த வகுப்புகள் நடத்தினேன். பின்னர் படிப்படியாக வாக்கியங்கள் சொல்லிக் கொடுத்தேன். ஆறு மாத காலம் பயிற்சி அளித்ததன் மூலம், இறுதியில் அவர்கள் ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டனர். ஆன்லைன் வகுப்புகள் பல மாவட்டங்களில் இருந்து மாணவர்களை ஒன்று சேர்க்க உதவியது.

இவ்வாறு, மாணவர்களுக்கு மட்டுமின்றி போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கும் ஆங்கிலம் கற்றுத் தருகிறேன்.

நரிக்குறவர்கள், மலைவாழ் மக்களுக்கு, மூத்தக் குடிமக்களுக்கு கையெழுத்து போடக் கற்றுத்தருவது, செங்கல் சூளையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துவது, கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றையும் செய்து வருகிறேன். 

Next Story