கலைகளில் சாதிக்கும் சம்யுக்தா


கலைகளில் சாதிக்கும் சம்யுக்தா
x
தினத்தந்தி 11 April 2022 5:30 AM GMT (Updated: 9 April 2022 10:31 AM GMT)

கலைத்துறை ஈடுபாட்டுக்காக ‘நடனமணி', ‘நடன மயூரி' என 50-க்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கிறேன். மற்ற திறமைகளுக்காக ‘சாதனை மாணவி', ‘சிங்கப் பெண்' போன்ற பல்வேறு பட்டங்களுடன் 150-க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.

ரதம், கதக், நீச்சல், யோகா, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்று, பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார் பள்ளி மாணவி சம்யுக்தா.

கோவை மாவட்டம் மணியக்காரம்பாளையத்தைச் சேர்ந்த இவர், அதே பகுதியிலுள்ள சர்வதேசப் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா ரமேஷ்பாபு சொந்தமாகத் தொழில் செய்கிறார். அம்மா சந்திரபிரபா வீட்டை நிர்வகித்து வருகிறார். அவருடன் பேசியபோது.. 

உங்களின் கலைத்துறை ஈடுபாடு பற்றி?
படிப்போடு, கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று, பெற்றோர் என்னைச் சிறுவயதில் நடனப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் இருந்தாலும் நாளடைவில் எனக்கு நடனத்தின் மீது ஈடுபாடு வந்துவிட்டது. எனது குரு சீதாலட்சுமி வழிகாட்டுதலின்படி கடந்த 12 வருடங்களாக ‘பரதம்' மற்றும் ‘கதக்' நடனங்களைக் கற்றுவரும் நான், நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். நடனத்தில் 25.98 விநாடிகளில் 54 முத்திரைகளைச் செய்து உலக சாதனை செய்திருக்கிறேன்.

மேலும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் மாவட்ட அளவில் வெள்ளிப் பதக்கமும், 16 வயதுக்குட்பட்டோருக்கான பாரம்பரிய உடையழகிப் போட்டியில் முதலிடமும் பெற்றிருக்கிறேன். நீச்சல் மற்றும் யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். பாரம்பரிய கலைகளை பரப்பும் விதமாக செயலி ஒன்றையும் உருவாக்கியிருக்கிறேன்.

நீங்கள் உருவாக்கிய செயலி பற்றி சொல்லுங்கள்?
நாட்டியத்தின் மூலமாக இந்தியக் கலாசாரத்தை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் ‘யுக்தா' என்ற மொபைல் செயலியை வடிவமைத்துள்ளேன்.

இதன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும், எவர் வேண்டுமானாலும் நமது பாரம்பரியக் கலைகளான நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்வதோடு, அவை குறித்த அனைத்து விரிவான தகவல்களையும் பெற முடியும். மேலும், அவரவர் பகுதியில் நடக்கும் கலை, கலாச்சார நிகழ்வுகள், அவை தொடர்பான போட்டிகள் குறித்தும் இதன் மூலமாக அறிந்துகொள்ள இயலும்.

உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் பற்றி?
கலைத்துறை ஈடுபாட்டுக்காக ‘நடனமணி', ‘நடன மயூரி' என 50-க்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கிறேன். மற்ற திறமைகளுக்காக ‘சாதனை மாணவி', ‘சிங்கப் பெண்' போன்ற பல்வேறு பட்டங்களுடன் 150-க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். அவை என்னை மேலும் சிறப்பாகச் செயல்படத் தூண்டுகின்றன. எனது திறமையை உணர்ந்து ஊக்குவிக்கும் பெற்றோர், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விடுப்பு தந்து ஒத்துழைக்கிற பள்ளி நிர்வாகம் என பல தரப்பின் ஆதரவுகளால் இது சாத்தியமாகிறது.

நடனத்தில் நான் செய்த உலக சாதனை ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ராபா மீடியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், போர்வென் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பீனிக்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றில் இடம் பெற்றுள்ளது.

லட்சியம்?
கலைத்துறையில் உலகமே திரும்பிப் பார்க்கும் உயரத்தை எட்ட வேண்டும். படிப்பில், எம்.பி.ஏ., முடித்து அப்பாவின் நிறுவனத்தில் பொறுப்பு வகிக்க வேண்டும். 

Next Story