திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2021 4:26 PM GMT (Updated: 20 Dec 2021 4:26 PM GMT)

நேற்று விடுமுறை தினத்தையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்ததையொட்டி, கோவில் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

இந்த கோவிலில் ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் ஆகிய விஷேக நாட்களில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர்.

களை கட்டியது

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இங்கு கோவிலுக்கு முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் ஆன்மிக சிந்தனையை தூண்டும் மாதங்களாக கருதப்படுவதால் தற்போது திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியது.

இந்தநிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

3 மணி நேரம் காத்திருப்பு

இவர்களில் பெரும்பாலானோர் சபரிமலை மற்றும் மேல்மருவத்துர் கோவிலுக்கு மாலை அணிந்தவர்களாக காணப்பட்டனர். அதிக அளவில் திரண்ட கூட்டத்தால், பொது வழியில், மூலவரை தரிசிக்க, 3 மணி நேரமும், 150 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தில் தரிசக்க 1 மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழி்பட்டனர். மார்கழி மாதத்தையொட்டி, மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


Next Story