தாம்பரம் மாநகராட்சியில் மண்டல தலைவா் பதவியை கைப்பற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே போட்டி


தாம்பரம் மாநகராட்சியில் மண்டல தலைவா் பதவியை கைப்பற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே போட்டி
x
தினத்தந்தி 26 Feb 2022 10:17 AM GMT (Updated: 26 Feb 2022 10:17 AM GMT)

தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்ற நிலையில், மண்டல தலைவா் பதவியை கைப்பற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி

புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில், தி.மு.க. கூட்டணி 54 வார்டுகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 9 இடங்களையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர்.

இதற்கிடையே, 21 மாநகராட்சியில் 11 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் பட்டியலின பெண் கவுன்சிலர்கள் மேயர் பதவியை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகின்றனர்.

பட்டியலின பெண்ணுக்கு மேயர்

அதேபோல துணை மேயர் பதவியிலும் அக்கட்சியினரிடயே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் முதல் தேர்தல் நடைபெற்று உள்ளதால் தாம்பரம் பகுதியை சேர்ந்த வெற்றி பெற்ற பட்டியலின பெண்ணிற்கே மேயர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை மேயர் பதவி பல்லாவரம் பகுதியை சேர்ந்த தி.மு.க.வினருக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. துணை மேயர் பதவிகள் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மண்டல தலைவர்கள் பதவியை குறிவைத்து தங்கள் கட்சித் தலைவர்கள் மூலமாக தி.மு.க. தலைமையை அணுகி வருகின்றனர்.

5 மண்டலங்கள்

தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை 5 மண்டலங்கலாக பிரிக்கப்பட்டுள்ளது. பம்மல் அலுவலகத்தில் செயல்பட உள்ள 1-வது மாநகராட்சி மண்டலத்தில் 1 2 3 4 5 6 7 8 10 11 12 29 30 31 ஆகிய 14 வார்டுகள் உள்ளன. இதில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

பல்லாவரம் அலுவலகத்தில் செயல்படும் 2-வது மண்டலத்தில் 9 13 14 15 16 17 18 19 20 21 24 26 27 28 ஆகிய 14 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 11 இடங்களிலும் ம.தி.மு.க., சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

செம்பாக்கம் அலுவலகத்தில் செயல்படும் 3-வது மண்டலத்தில் 22 23 25 34 35 36 37 38 39 40 41 42 43 44 ஆகிய 14 வார்டுகள் உள்ளன.

இதில் தி.மு.க. 7 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும்,காங்கிரஸ், அ.தி.மு.க. தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

கடும் போட்டி

தாம்பரம் அலுவலகத்தில் செயல்படும் 4-வது மண்டலத்தில் 32 33 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 ஆகிய 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 இடங்களிலும் அ.தி.மு.க. மற்றும் சுயேச்சைகள் தலா 2 இடங்களிலும் மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மாடம்பாக்கம் அலுவலகத்தில் செயல்பட உள்ள 5-வது மண்டலத்துக்குட்பட்டு 45 46 47 48 62 63 64 65 66 67 68 69 70 ஆகிய 13 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் மண்டலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற தி.மு.க.வினருக்கு போதிய இடங்கள் உள்ளதால் யார் மண்டலத் தலைவர் பதவியை பெறுவது என்பதில் தி.மு.க.வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மண்டலத் தலைவர் பதவி

அனைத்து மண்டலங்களிலும் தி.மு.க.வை சேர்ந்தவர்களே மண்டல தலைவர்களாகும் வாய்ப்பு உள்ளது. இதில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சியினரும் மண்டலத் தலைவர் பதவியை பெற முயற்சித்து வருகின்றனர்.

மேயர், துணை மேயர் பதவி தி.மு.க.விற்கு ஒதுக்கப்படுவதால் கூட்டணி கட்சியினர் மண்டலத் தலைவர் பதவியாவது தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என தி.மு.க. தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கூட்டணிக் கட்சியினரை திருப்திபடுத்த தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு கமிட்டிகளில் உறுப்பினர் குழுத்தலைவர் பதவி கூட்டணி கட்சினருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.


Next Story