ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபர் மகன் கடத்தல்: காரைப் பின்தொடர்ந்து கும்பலை கைது செய்த போலீஸார்


ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபர் மகன் கடத்தல்: காரைப் பின்தொடர்ந்து கும்பலை கைது செய்த போலீஸார்
x
தினத்தந்தி 24 March 2022 9:47 AM GMT (Updated: 24 March 2022 9:47 AM GMT)

கொரட்டூரில் தொழிலதிபர் மகனை வீடு புகுந்து காரில் கடத்தி சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் காரில் கடத்தல்

சென்னை கொரட்டூர் அடுத்த பாடி சத்யவதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். தொழிலதிபரான இவர் அத்திப்பட்டு பகுதியில் ஆட்டோமொபல்ஸ் கருவிகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியன் (வயது 27). இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டுக்கு காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக ஆதர்ஷ் சுப்பிரமணியனை காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காரை வழிமறித்து தாக்கினர். ஆனாலும் கடத்தல் கும்பல் ஆதர்ஷ் சுப்பிரமணியனுடன் தப்பிச் சென்றனர். இதுகுறித்து கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

இதற்கிடையே கடத்தல் கும்பல் வாலிபரின் தந்தையும் தொழிலதிபருமான சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, கடத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த கார் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பதும், மேலும் காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. ஜி.பி.எஸ். கருவி மூலம் கார் செல்லும் பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்ததில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியில் சென்று கொண்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து நேற்று காலை தனிப்படை போலீசார் அங்கு சென்று காரை மடக்கி கடத்தப்பட்ட வாலிபர் ஆதர்ஷ் சுப்பிரமணியனை பத்திரமாக மீட்டனர். பின்னர் கடத்தல் கும்பலை கொரட்டூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

3 பேர் கைது

விசாரணையில், பிடிபட்டவர்கள் ஆவடியை சேர்ந்த செந்தில்குமார் (37), முகப்பேர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (20), அம்பத்தூரை சேர்ந்த ஜீவன் பிரபு (21) என்பது தெரியவந்தது. இதில் செந்தில்குமார் ஆதர்ஷ் சுப்பிரமணியனின் உறவினர் என்பதும், தொழில்ரீதியாக பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் செந்தில்குமார் அவரை கடத்தி சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story