திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2022 4:14 PM GMT (Updated: 31 March 2022 4:14 PM GMT)

திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நடராஜன், கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று அதிகத்தூர் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதை அவர் அதிகத்தூர் மற்றும் கடம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாக தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னா என்கிற சின்னராஜ் (வயது 33) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று பாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கிருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் இருந்த பையில் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பாண்டூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அபித் (19) என்பவரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story