பஞ்சாப் மாநில அரசை கண்டித்து புதுச்சேரியில் பா.ஜ.க. மவுன போராட்டம்


பஞ்சாப் மாநில அரசை கண்டித்து புதுச்சேரியில் பா.ஜ.க. மவுன போராட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:56 PM GMT (Updated: 8 Jan 2022 8:56 PM GMT)

பஞ்சாப் மாநில அரசை கண்டித்து புதுவையில் பா.ஜ.க. சார்பில் மவுன போராட்டம் நடந்தது. இதில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

மவுன போராட்டம்

பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தி மக்கள் நல வளர்ச்சி திட்டங்களை தடுத்து தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அந்த மாநில காங்கிரஸ் அரசு மீது பா.ஜ.க. குற்றஞ்சாட்டி உள்ளது. பஞ்சாப் மாநில அரசை கண்டித்து புதுவையில் பா.ஜ.க. சார்பில் நேற்று மவுன போராட்டம் நடந்தது.

புதுவை கடற்கரைசாலை காந்திசிலை எதிரே நடந்த இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்க.விக்ரமன், தீப்பாய்ந்தான், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், செல்வம், மோகன்குமார், என்ஜினீயர் சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு பிரார்த்தனை

காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வன்முறைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால்தான் இந்தியா முழுவதும் காணாமல் போய் வருகிறது. தற்போது ஒரு சில இடங்களில் உள்ள காங்கிரசையும் மக்கள் விரைவில் நிராகரிப்பார்கள். இதன் விளைவு மிகக் கடுமையானதாக இருக்கும். பஞ்சாப் சம்பவத்தில் உள்ள பின்னணி குறித்து மத்திய அரசு விசாரிக்கும்.

பஞ்சாப் சம்பவத்தை கண்டித்து வருகிற 13-ந்தேதி வரை தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம். மேலும் 10-ந்தேதி பிரதமர் நீண்ட காலம் வாழ சித்தானந்தா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

மன்னிப்பு கேட்கவேண்டும்

இப்போது காந்தி சொன்ன அகிம்சை வழிப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பஞ்சாப் முதல்-மந்திரி உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். அவர் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story