“சில வரலாற்று பாடங்களை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும்” - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


“சில வரலாற்று பாடங்களை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும்” - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 3 Feb 2022 9:16 AM GMT (Updated: 3 Feb 2022 9:16 AM GMT)

மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது’ என விமர்சித்தார். மேலும் லடாக்கில் சினா மற்றும் பாகிஸ்தானை ஒன்றிணைத்து மத்திய அரசு பெரும் தவறு செய்துவிட்டது என குற்றம்சாட்டினார். 

இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ராகுல் காந்தி சில வரலாற்று பாடங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார். கடந்த 1963 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக ஷக்சகாம் பள்ளத்தாக்கை பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்படைத்ததாகவும், 1970 ஆம் ஆண்டு லடாக்கில் காரகோரம் எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா நெடுஞ்சாலை கட்டியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

1970-களில் இருந்து சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நெருங்கிய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இருந்து வருகிறது என்றும் 2013 ஆம் ஆண்டு சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் தொடங்கியது என்றும் குறிப்பிட்டுள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கர், இந்த காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். 

Next Story