காங்கிரஸ் கட்சி விஷத்தை விதைத்துள்ளது - உத்தரகாண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!


காங்கிரஸ் கட்சி விஷத்தை விதைத்துள்ளது - உத்தரகாண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!
x
தினத்தந்தி 8 Feb 2022 10:28 AM GMT (Updated: 8 Feb 2022 10:28 AM GMT)

விஜய் சங்கல்ப் சபா நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசினார்.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ந்தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், விஜய் சங்கல்ப் சபா நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  

“இந்த மாநிலத்தை சிலர் சூரையாடி வந்தனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்கள் டெல்லியில் பேருந்துகளில் பயணித்த உத்தரகாண்ட் மக்களை பேருந்தை விட்டு இறக்கி விட்டனர்.

நாங்கள் ‘சார் தாம் சாலை’ திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவு செய்து 90 சதவிகித பணிகளை முடித்துள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் இப்போது தான் அந்த பெயரை ஞாபகத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

தேர்தல் தினத்தன்று நான் டெல்லியில் இருந்தாலும், உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு என் மனதில் மிகப்பெரிய இடம் உள்ளது. நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் நம்மை பின்னோக்கி  கொண்டு செல்ல விரும்புகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி விஷத்தை விதைத்துள்ளது” என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இதனை தொடர்ந்து இன்று உத்தரகாண்ட் மாநில கங்கோலிஹாட் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், “காங்கிரசின் நிலைமை என்னவென்றால் அவர்கள் இன்னும் முதல் மந்திரி வேட்பாளரை கூட அறிவிக்காமல் தேர்தலை சந்திக்க உள்ளனர்.ஆனால் நாங்கள் முதல் நாளிலிருந்தே முதல் மந்திரி வேட்பாளரை அறிவித்து விட்டு தான் தேர்தலை சந்திக்க உள்ளோம்.புஷ்கர் சிங் தாமி தான் மீண்டும் முதல் மந்திரி வேட்பாளராக உள்ளார்”  என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Next Story