உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் - ராகுல் காந்தி!


உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் - ராகுல் காந்தி!
x
தினத்தந்தி 15 Feb 2022 9:37 AM GMT (Updated: 15 Feb 2022 9:39 AM GMT)

பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை கேளுங்கள் என்று ராகுல் காந்தி பேசினார்.

பாட்டியாலா,

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாட்டியாலா மாவட்டம் ராஜ்பூராவில் நடைபெற்ற பேரணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,

“எப்போதும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து தான் நான் வளர்க்கப்பட்டேன்.

நீங்கள் பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை கேளுங்கள், படால் ஜி சொல்வதை கேளுங்கள் மற்றும் கெஜ்ரிவால் ஜி சொல்வதை கேளுங்கள்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மத்திய அரசை நான்  எச்சரித்தேன், ஆனால் அவர்கள் என் கருத்தை பொருட்படுத்தவில்லை.

ஆம் ஆத்மி கட்சியினர், தாங்கள் தான் முதன்முதலாக  ‘மொஹல்லா கிளினிக்குகளை’ தொடங்கியதாக கூறுகின்றனர். ஆனால் முதல்  ‘மொஹல்லா கிளினிக்’, காங்கிரஸ் ஆட்சியில் ஷீலா தீக்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தை திறம்பட நிர்வகிப்பதில் காங்கிரஸ் கட்சி கைதேர்ந்தது. பஞ்சாப் இளைஞர்கள், புதிய கட்சிகளுக்கு ஆட்சிப் பொறுப்பை கொடுத்து பரிசோதனையில் ஈடுபடுவதை முயற்சிக்க மாட்டார்கள்.”

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பஞ்சாப் மாநில தேர்தலில், முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின்  ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சாவின்  ‘சிரோன்மனி அகாலி தளம்’ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக களம் காணுகிறது. இந்த கூட்டணி ஆளும் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிய முனைப்பு காட்டி வருகிறது. மறுமுனையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story