கல்லூரி மாணவியின் கலக்கல் சேவை


கல்லூரி மாணவியின் கலக்கல் சேவை
x
தினத்தந்தி 2 Dec 2021 4:26 PM GMT (Updated: 2 Dec 2021 4:26 PM GMT)

போக்குவரத்து விதிகளைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதும், அவர்களை பின்பற்ற வைப்பதும்தான் தனது ஒரே குறிக்கோள் என்று கூறுகிறார் மாணவி சுபி ஜெயின்.

போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போலீசாரின் நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதுண்டு. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதோடு சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு பலர் கண்டிப்போடும், சிலர் அன்போடும் வேண்டுகோள் விடுப்பதுண்டு. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவி சுபி ஜெயின், போக்குவரத்தை ஒழுங்கமைக்கும் பாணிக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

படிப்புக்கு இடையே தன்னார்வலராக போக்குவரத்து சிக்னல்களில் பணி புரிபவர், ‘போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்களிடம் கடிந்து பேசக் கூடாது, அபராதம் விதிக்க பரிந்துரைக்கக்கூடாது’ என்பதை தனது கொள்கையாக பின்பற்றி வருகிறார். மேலும் வேடிக்கையான சைகைகள் மற்றும் நடன அசைவுகள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

24 வயதாகும் அவர் போக்குவரத்து போலீசார் அணியும் ஜாக்கெட் உடுத்தியபடி சாலையின் நான்கு புறமும் சோர்வின்றி சுழன்று வருகிறார். ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பார்த்தால் கைகூப்பி வணங்கி ‘இனி இப்படி வராதீர்கள்’ என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார். காரில் சீட்பெல்ட் அணியாமல் இருப்பவர்களிடமும் வணக்கம் தெரிவிக்கும் பாணியிலேயே விதிமுறைகளை பின்பற்று மாறு கூறுகிறார். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு நன்றியும் தெரிவிக்கிறார். போக்குவரத்தை ஒழுங்கமைக்கும் அவரது நடன பாணியும், விதிமுறைகளை குறிப்பிடும் சிக்னல் அசைவுகளும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

போக்குவரத்து விதிகளைப் பற்றி மக்களுக்கு தெரியப் படுத்துவதும், அவர்களை பின்பற்ற வைப்பதும்தான் தனது ஒரே குறிக்கோள் என்று கூறுகிறார். ‘‘ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் தங்களை பார்த்து மற்றவர்கள் திட்டுவதையோ, அபராதம் விதிப்பதையோ யாரும் விரும்புவதில்லை. அவ்வாறு நடந்துவிட்டால் கோபமோ, விரக்தியோ அடைகிறார்கள்.

அந்த நாள் முழுவதுமே அவர்களின் செயல்பாடுகளில் அவை வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். அதே மன நிலையிலேயே வீடு திரும்புவார்கள். அது போன்ற சூழலுக்கு அவர்களை தள்ளுவதற்கு நான் விரும்பவில்லை. சட்டத்தை மீறுபவர்களிடம் விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்வேன். பெரும்பாலானவர்கள் நேர்மறையாக செயல்படுகிறார்கள். சாலை விதிகளை பின்பற்றுபவர்கள் பாராட்டப்படுவதை பார்த்து, மீறுபவர்கள் கூட விதிகளுக்கு கீழ்படிய தொடங்குகிறார்கள்’’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

சுபியின் புன்னகையும், மனதை கவரும் சைகைகளும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைய வைத்திருக்கிறது.


Next Story