இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்! சாதாரண வெப்பநிலையில் உபயோகப்படுத்தும் வகையில் புதிய தடுப்பூசி!


இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்! சாதாரண வெப்பநிலையில் உபயோகப்படுத்தும் வகையில் புதிய தடுப்பூசி!
x
தினத்தந்தி 8 March 2022 9:43 AM GMT (Updated: 8 March 2022 9:43 AM GMT)

இந்த தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 1 மாத காலம் வரை பயன்படுத்தலாம்.

பெங்களூரு,

இந்திய அறிவியல் கழகத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பில் தொடக்கநிலை நிறுவனமாக உள்ள ‘மைன்வேக்ஸ்’, கடந்த ஓராண்டாக வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் திறனுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

உலக அளவில் 5ல் 3 பங்கு தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போல.

இந்நிலையில் இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ ஐ எஸ்,) மைன்வேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

இந்த தடுப்பூசியை குளிர் நிலையில் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்காது. சாதாரண அறை வெப்பநிலையில் வைத்தே பயன்படுத்தலாம்.

இந்த தடுப்பூசி விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு விட்டது.அடுத்தகட்டமாக மனிதர்களிடம் முதற்கட பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

இந்த தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 வாரங்கள் வரை பயன்படுத்தலாம். 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 90 நிமிடங்கள் அதாவது ஒன்றரை மணிநேரம் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய ‘வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட’ தடுப்பூசிகளை விலையுயர்ந்த குளிரூட்டும் கருவிகள் இல்லாமல் தொலைதூரப் பகுதிகளுக்கு சேமித்து கொண்டு செல்ல முடியும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரசுக்கு எதிராக மிகுந்த திறன் வாய்ந்ததாக இருப்பதை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமையான ‘காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம்(சி எஸ் ஐ ஆர் ஓ)’,  மைன்வேக்ஸ் தடுப்பூசியின் அறிவியல் மூலக்கூறுகள், கொரோனா வைரசின் அனைத்து வகைப்பாடுகளையும் எதிர்க்க வல்லது என்று தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை பேராசிரியர் சேஷாத்ரி வாசன் கூறுகையில், “எலிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரசுகளுக்கு எதிரான ஆண்டிபாடிகளை மைன்வாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட எலிகள் பெற்றுள்ளன என்பது உறுதியாகியுள்ளது.

தடுப்பூசி பயன்பாட்டை பொறுத்தமட்டில், ஏழை நாடுகளில் 100 பேருக்கு 14 டோஸ் தடுப்பூசி என்ற கணக்கில் தான் தடுப்பூசி பயன்பாடு உள்ளது. அதேசமயம், வளர்ந்த பணக்கார நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் 100 பேருக்கு 182 டோஸ் தடுப்பூசி என்ற விகிதத்தில் தடுப்பூசி பயன்பாடு உள்ளது.

இத்தகைய தடுப்பூசி சமத்துவமின்மையை சரிசெய்ய, மைன்வேக்ஸ் தடுப்பூசியின் வெப்ப நிலைத்தன்மை நம்பிக்கையூட்டும் விதத்தில் இருப்பதால், குளிரூட்டும் கருவிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில்  வசதிகள் இல்லாத நாடுகளுக்கு மைன்வேக்ஸ் போன்ற தடுப்பூசிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

உள்நாட்டு தயாரிப்பான மைன்வேக்ஸ் நிறுவன தடுப்பூசி இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.

Next Story