துபாய்க்கு கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி வைரக்கற்கள் சிக்கியது


துபாய்க்கு கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி வைரக்கற்கள் சிக்கியது
x
தினத்தந்தி 29 Dec 2021 10:05 PM GMT (Updated: 29 Dec 2021 10:05 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.6 கோடி வைரக்கற்கள் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் பெரும் அளவில் வைரம் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அங்கு புறப்பட்ட தயாராக இருந்த விமான பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாய் செல்ல தயாராக இருந்த சென்னையை சேர்ந்த 30 வயதுடைய வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகத்தின் பேரில், அவரது உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

வைரக்கற்கள் சிக்கியது

ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர் சூட்கேசின் கைப்பிடி போல் வித்தியாசமாக ‘டெலஸ்கோப்’ கருவி ஒன்று இருந்தது. சந்தேகம் அடைந்து அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்த போது, அதில், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் ரூ.5 கோடியே 76 லட்சம் மதிப்புள்ள 1052.72 கேரட் வைரக்கற்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை வாலிபரின் விமான பயணத்தை ரத்து செய்தனர். இதையடுத்து, வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இந்த வைரக்கற்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

அதிகாரிகள் விசாரணை

முன்னதாக ஆப்பிரிக்க நாட்டில் உள்ள காங்கோ நாட்டில் இருந்து துபாய் வழியாக விமானம் ஒன்று சென்னை வந்து இறங்கியது. இதில் பயணம் செய்த மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த வாலிபரை நிறுத்தி விசாரித்ததுடன், அவரது உடமையை சோதித்ததில், ரூ.10 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள 717.95 கேரட் அளவிலான பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து வைரக்கற்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், மும்பை வாலிபரை கைது செய்தனர். பிடிபட்ட கடத்தல் வாலிபர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காங்கோ நாட்டில் இருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை துபாய் வழியாக சென்னைக்கு கடத்தி வந்து, பட்டை தீட்டப்பட்டு மீண்டும் துபாய்க்கு கடத்தப்படுவது தெரியவந்தது.

Next Story