எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்களுக்கு உணவு விநியோகம்


எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்களுக்கு உணவு விநியோகம்
x
தினத்தந்தி 15 March 2022 10:07 AM GMT (Updated: 15 March 2022 10:07 AM GMT)

எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை, 

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார். இந்நிலையில், இவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தியபோது, அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், வீட்டின் முன் காலை முதல் அதிமுக தொண்டர்கள் குவிந்தபடி உள்ளனர்.

அவ்வாறு குவிந்த தொண்டர்களுக்கு வித, விதமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலை உணவாக பொங்கல், இட்லி, வடை, கேசரி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பிஸ்கட் பாக்கெட்டுகள், டீ, முறுக்கு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன. 

Next Story