பிரபல வில்லன் நடிகர் கவலைக்கிடம்!


பிரபல வில்லன் நடிகர் கவலைக்கிடம்!
x
தினத்தந்தி 22 Nov 2021 10:11 AM GMT (Updated: 22 Nov 2021 10:12 AM GMT)

தமிழில் ‘பஞ்சதந்திரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த குணசித்திர வில்லன் நடிகர் கைகலா சத்ய நாராயணா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாகப்பட்டினம்,

கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா. பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2019-ல் வெளியான மகேஷ்பாபுவின் மகரிஷி படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில், 86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை, சிரஞ்சீவி தனது டுவிட்டரில், கைகலா சத்ய நாராயணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், அவரது உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் தெரிகிறது. அவரால் பேச முடியவில்லை என்றாலும், அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும், நாம் அனைவரும் அதனை கொண்டாட வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னபோது, ​​அவர் சிரித்துக்கொண்டே கட்டைவிரல் சமிக்ஞையைக் காட்டினார்.



“ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த கைகலா சத்யநாராயணா சுயநினைவு திரும்பியதைக் கேள்விப்பட்டவுடன், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சுப்பா ரெட்டியின் உதவியுடன் நான் அவரிடம் போனில் பேசினேன். அவர் பூரண குணமடைவார் என்ற முழு நம்பிக்கையை எனக்கு அளித்தது... அவர் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன், இந்த செய்தியை அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என சிரஞ்சீவி கூறி உள்ளார்.

Next Story