ஜப்பான்: சமூகப்பரவலான ஒமைக்ரான்... தீவிரமாக்கப்படும் கட்டுப்பாடுகள்...!


ஜப்பான்: சமூகப்பரவலான ஒமைக்ரான்... தீவிரமாக்கப்படும் கட்டுப்பாடுகள்...!
x
தினத்தந்தி 22 Dec 2021 10:06 AM GMT (Updated: 22 Dec 2021 10:06 AM GMT)

ஒமைக்ரான் பரவல் காரணமாக வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

ஒமைக்ரான் வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில், ஜப்பானில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு நடவடிக்கையாக, வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் ஜப்பானியர்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“ஜப்பானில் ஒமைக்ரான் பாதிப்பு இன்னும் சமூக பரவலாக  மாறவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்யப்படும்” என்று ஜப்பான் பிரதமர் கிஷிடா நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜப்பானில் இன்று ஒரே குடும்பத்தை சார்ந்த 3 நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் யாரும் வெளிநாட்டுக்கு பயணிக்கவில்லை என்பதால் சமூகப்பரவல் காரணமாக ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அங்கு தற்போது 3ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதியோர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Next Story