நாடே கொண்டாடும் வெற்றி தினம் இன்று..!

தேசிய போர் நினைவிடத்தில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
Published on

வங்காளதேச விடுதலைப்போர்

பாகிஸ்தானின் கிழக்கு பகுதி மக்கள் தனிநாடு வலியுறுத்தி 1971ல் விடுதலைப்போரை (வங்காளதேச விடுதலைப் போர்) தொடங்கினர். அவர்களின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளித்து பாகிஸ்தானுக்கு எதிராக 1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போரில் இறங்கியது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 1971 டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் படையினர் சரண் அடைந்தனர்.

தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில், இந்தியாவின் லெப்டினென்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்து, ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அதன்பின் கிழக்கு பாகிஸ்தான் "வங்காளதேசம்" என்ற தனி நாடாக உருவானது.

விஜய் திவாஸ்

இந்த போரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாகவும் ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதி இந்தியா முழுவதும் வெற்றி நாள் (விஜய் திவாஸ்) அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில், தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் (India Gate) உள்ள தேசிய போர் நினைவிடத்தில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை மந்திரி அஞ்சலி செலுத்துகிறார். அதேபோல் பெங்களூருவில் உள்ள தேசிய ராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும், பொதுமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்கின்றனர்.

ராஜ்நாத் சிங் மரியாதை

இந்த ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி அஜய் பட், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com