5 நாள் 'இந்திய அறிவியல் மாநாடு' தொடங்கியது: இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவை தர்சார்பு நாடாக மாற்ற நமது அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும் என்று நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
5 நாள் 'இந்திய அறிவியல் மாநாடு' தொடங்கியது: இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு
Published on

நாக்பூர், 

இந்தியாவை தர்சார்பு நாடாக மாற்ற நமது அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும் என்று நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

5 நாள் மாநாடு

இந்திய அறிவியல் மாநாடு கடந்த 1914-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த வரிசையில் 108-வது மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.டி.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

'பெண்களுக்கு அதிகாரமளித்தலுடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகிறது.

வருகிற 7-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.

இந்தநிலையில் டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தற்சார்பு நாடு

இந்தியா அறிவியல் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அறிவியல் வளர்ச்சியை கொண்டு இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற வேண்டும். இதற்காக நமது அறிவியல் சமூகம் பாடுபட வேண்டும். அறிவியலின் முயற்சிகள் ஆய்வகங்களில் இருந்து நிலத்திற்கு செல்ல வேண்டும். அப்போதுதான் அது உண்மையான பலனை தரும்.

அறிவியல் வளர்ச்சி என்பது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக எரிசக்தி தேவை அதிகமாக உள்ளது. இதற்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை. அடுத்த 25 ஆண்டுகள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். அறிவியல் மூலம் நாட்டை தன்னிறைவு கொண்டதாக மாற்றவும், அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரவும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

சிறுதானியங்களின் ஆண்டாக இந்த ஆண்டை (2023) ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் சிறுதானியங்களையும், அவற்றின் பயன்பாட்டையும் அறிவியலின் துணை கொண்டு மேம்படுத்த வேண்டும்.

கண்டுபிடிப்பு பட்டியலில் அபாரம்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகமாக தொடங்கப்படும் நாடுகளின் பட்டியலில் தற்போது முதல் 3 இடத்திற்குள் இந்தியா வந்து இருக்கிறது. கண்டுபிடிப்புகள் தொடர்பான பட்டியலில் 2015-ம் ஆண்டு வரை இந்தியா 81-வது இடத்தில் இருந்தது. தற்போது அதை 40-வது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

உலக மக்கள் தொகையில் 17-18 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களின் முன்னேற்றம் உலக எழுச்சிக்கு வழிவகுக்கும்.

அறிவியலின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது மட்டும் எங்கள் சிந்தனை அல்ல. பெண்களின் பங்களிப்பால் அறிவியலை மேம்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெண் விஞ்ஞானிகளின் விரிவுரைகள்

இந்த மாநாட்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளும், புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகளின் விரிவுரைகளும் இடம்பெறுகிறது.

இதைத்தவிர குழந்தைகள் அறிவியல் மாநாடு, விவசாயிகள் அறிவியல் மாநாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலும் ஆய்வு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும் இந்த மாநாட்டில் 2 ஆயிரத்து 758 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com