பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது


பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது
x

பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு குறித்த அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் அதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கலந்தாய்வில் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் இருக்கின்றன.

முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் 24-ந் தேதி (புதன்கிழமை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கி 4 சுற்றுகளாக நடக்கிறது. சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை சிறப்பு பிரிவில் நடத்தாமல், பொதுப்பிரிவு கலந்தாய்வு நடத்தும் அதே தேதியில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் விருப்பப்பட்ட இடங்களில் சேரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு கூடுதல் சலுகையாக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதாவது, பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு கட்-ஆப் மதிப்பெண்படி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பது போலவே, அதே கட்-ஆப் மதிப்பெண்ணுடன் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டிலும் இடத்தை தேர்வு செய்யலாம், அதேபோல் பொதுப்பிரிவிலும் விருப்பமான இடத்தை தேர்வு செய்ய முடியும். 2 இடங்களை தேர்வு செய்யும் அந்த மாணவர் இறுதியில் எந்த இடத்தில் சேர விருப்பமோ அதில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அவர் பெறும் இடத்துக்கு மட்டும்தான் கல்வி, விடுதி, பஸ் உள்பட அனைத்து கட்டணங்களையும் அரசு செலுத்தும். பொதுப்பிரிவில் தேர்வு செய்த இடத்தில் சேர்ந்தால், அதற்கு அரசு கட்டணம் செலுத்தாது.

அனைத்து பிரிவினருக்குமான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. கடந்த ஆண்டு வரை கலந்தாய்வு தொடக்கத்தில் முன்பண கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. நேரடியாக மாணவர் விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தேர்வு செய்ததில் தற்காலிக ஒதுக்கீடு மாணவர்களுக்கு அளிக்கப்படும். அதில் மாணவர் ஒரு இடத்தை உறுதி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.

இந்த ஆண்டு ஒதுக்கீட்டு ஆணையிலும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்வு செய்த இடத்தில் நேரடியாக சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் பணத்தை செலுத்தி சேரவேண்டும். மற்றொன்று எனக்கு மற்றொரு வாய்ப்பில் சிறந்த இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாணவர், மாணவர் சேர்க்கை சேவை மையத்தில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற கல்லூரியின் பெயரில் கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த மாணவருக்கு அடுத்த கலந்தாய்வில் விருப்பப்பட்ட இடம் கிடைக்கும் பட்சத்தில்தான் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்று, விருப்பப்பட்ட கல்லூரியில் கட்டணத்தை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.


Next Story